இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை தோற்கடிக்கும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்த உதவியுடன் 396 ரன்கள் குவித்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து தடுமாற்றமாக விளையாடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுக்க இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்கள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் போராடி 255 ரன்கள் சேர்த்தது.
சாதித்த அஸ்வின்:
அதிகபட்சமாக சுப்மன் கில் சதமடித்த 104 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 399 என்ற பெரிய இலக்கை துரத்தும் இங்கிலாந்துக்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த பென் டுக்கெட் 28 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். மறுபுறம் ஜாக் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் நைட் வாட்ச்மேனாக வந்த ரீகன் அஹ்மத் போராடி 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து வந்த ஓலி போப் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 23 (21) ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். குறிப்பாக கடந்த போட்டியில் 196 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்த அவரை சரியான நேரத்தில் ரோகித் சர்மாவின் அபார கேட்ச்சால் அஸ்வின் காலி செய்தார். அத்துடன் அடுத்ததாக வந்த இங்கிலாந்து பேட்டிங் துறையின் முதுகெலும்பாக போற்றப்படும் ஜோ ரூட்டையும் 16 (10) ரன்களில் தக்க சமயத்தில் அவுட்டாக்கிய அஸ்வின் திருப்பு முனையை உண்டாக்கினார்.
இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற பிஎஸ் சந்திரசேகர் சாதனையை உடைத்துள்ள அஸ்வின் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகள் எடுத்து அந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது அவரை முந்தியுள்ள அஸ்வின் 96* விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஹைதெராபாத்லயே அப்டினா.. இங்க இங்கிலாந்து சிதறடிச்சுருவாங்க.. இந்திய அணியை எச்சரித்த பார்த்திவ் படேல்
அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அரை சதமடித்து சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியை 73 ரன்களில் குல்தீப் யாதவ் தன்னுடைய சிறப்பான சுழல் பந்து வீச்சால் பெவிலியன் அனுப்பி வைத்தார். அவருடன் மறுபுறம் ஜோடி சேர்ந்து விளையாடும் முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவை 26 ரன்களில் பும்ரா முறையில் காலி செய்தார். அதனால் நான்காவது நாள் உணவு இடைவெளியில் 194/6 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 205 ரன்கள் தேவைப்படுகிறது. மறுபுறம் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.