IND vs RSA : மீண்டும் அதே பழைய கேப்டன்ஷிப் சொதப்பல் ! ரிஷப் பண்ட்டை மீண்டும் விமர்சிக்கும் முன்னாள் வீரர்

IND
- Advertisement -

தனது சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 12-ஆம் தேதியான நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு வெறும் 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 34 (21) ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 40 (35) ரன்களும் எடுக்க கடைசியில் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (21) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்.

Klassen 1

- Advertisement -

அதை தொடர்ந்து 149 என்ற இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பவர் பிளே ஓவர்களில் காலி செய்த புவனேஸ்வர் குமார் இந்தியாவுக்கு சூப்பர் தொடக்கம் கொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கி மிரட்டிய ஹென்றிச் க்ளாஸென் எஞ்சிய பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்டு 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அவருடன் கேப்டன் பவுமா 35 (30) ரன்களும் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுக்க 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா எளிதாக வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் வலுவான முன்னிலை பெற்றது.

சொதப்பல் கேப்டன்ஷிப்:
மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் இந்த தொடரில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டு அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக கேஎல் ராகுல் விலகியதால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் பேட்டிங்கில் ரன்கள் எடுக்க தடுமாறுவதுடன் ஒரு கேப்டனாக எந்த பவுலரை எப்போது உபயோகிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவை எடுப்பதில் திணறுகிறார்.

Pant

அதிலும் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் ஐபிஎல் 2022 தொடரில் ஊதா தொப்பியை வென்ற சஹாலிடம் முதல் 2 ஓவர்களில் ரன்களை கொடுத்தார் என்பதற்காக முழுமையாக 4 ஓவர்களை வழங்கவில்லை. அதனால் கௌதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற நிறைய முன்னாள் வீரர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட அவர் 2-வது போட்டியில் மீண்டும் ரன்களை வழங்கிய போதிலும் எதற்கு வம்பென்று சஹாலுக்கு 4 ஓவர்களை முழுமையாக வழங்கினார்.

- Advertisement -

அதே தவறு:
ஆனால் அக்சர் படேல் முதல் ஓவரில் 19 ரன்களை கொடுத்து விட்டார் என்பதற்காக இந்த போட்டியில் இவரின் பவுலிங் அவ்வளவுதான் என்று கருதிய பண்ட் அவருக்கு எஞ்சிய 3 ஓவர்களை வழங்காமல் மீண்டும் அதே தவறை செய்தார். பொதுவாக நிறைய பவுலர்கள் முதல் ஸ்பெல்லில் தடுமாறினாலும் 2-வது ஸ்பெல்லில் விக்கெட்டுகளை எடுப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் 81 ரனகள் விளாசி தோல்வியை பரிசளித்த க்ளாஸென் களத்திற்கு வந்த போது அக்சார் படேலை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என்று ரிஷப் பண்ட் பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹ்ரா மீண்டும் விமர்சித்துள்ளார்.

Nehra

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “9 – 10 ஆகிய ஓவர்களில் போட்டி சென்ற விதத்தை ரிஷப் பண்ட் மீண்டும் திரும்பி பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் அக்சர் பட்டேல் பிடித்து வைக்கப்பட்டார். ஆனால் களத்தில் 2 வலதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அதற்கு முன் அக்சர் பட்டேல் 2 – 3 ஓவர்கள் வீசியிருக்காத நிலையில் இது பற்றி பண்ட் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த போட்டியில் சஹாலிடம் செய்த தவறை இம்முறை அக்ஷர் படேலிடம் செய்துள்ளார்.

- Advertisement -

ஆனால் சில பவுலர்கள் போட்டியின் எந்த தருணத்திலும் சிறப்பாக பந்துவீசி வெற்றி பெறும் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே ரிஷப் பண்ட் என்ன தவறு நடந்தது என்பதை திரும்பி பார்க்க வேண்டும். மேலும் அனைவருமே தரமான வீரர்களாக இருப்பதால் வேண்டுமானால் விசாகப்பட்டினத்தின் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு 3-வது போட்டியில் மாற்றங்களை செய்யலாம்” என்று கூறினார்.

Dravid

இதே அம்சத்தைப் பற்றி மற்றொரு முன்னாள் இந்திய வீரர் பார்திவ் படேல் பற்றிப் பேசியது பின்வருமாறு. “டி20 போட்டிகளில் அது போன்ற தருணங்களில் போட்டியை உன்னிப்பாக கவனிப்பது முக்கியம். க்ளாஸென் ஆரம்பத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு எதிராக அக்சர் படேலை உபயோகத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : 3வது போட்டியில் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுங்க – சுனில் கவாஸ்கர் மீண்டும் கோரிக்கை

அவர்கள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். அக்சர் படேல் கூட ரன்கள் வழங்கினார் என்பதால் முழு ஓவர்களை கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் தலா 3 ஓவர்கள் வீசி சரியாக தலா வெறும் 17 ரன்களை மட்டுமே கொடுத்து மிகச் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஏன் 4-வது ஓவரை வீச வாய்ப்பு வழங்கவில்லை என்பது ரிஷப் பண்ட்டுக்கே வெளிச்சமாகும்.

Advertisement