Ashes 2023 : அனல் தெறிக்கப் போகும் ஆஷஸ் – கௌரவத்தை வெல்லப்போவது யார்? எந்த சேனலில் பார்க்கலாம் – புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2023 ஆஷஸ் கோப்பை ஜூன் 16ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. உலகிலேயே கடந்த 1880ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் தான் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு சர்வதேச போட்டி நடைபெற்றது. ஆரம்ப காலங்களில் அவ்விரு அணிகளும் சாதாரணமாக மோதி வந்த நிலையில் 1882ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் முதல் முறையாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மண்ணை கவ்வ வென்றது. குறிப்பாக அந்த தொடரில் சொந்த மண்ணில் படுமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து கொஞ்சம் கூட போராடாமல் தோல்வியை சந்தித்தது.

அதனால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் அந்நாட்டில் இருக்கும் பிரபல ஸ்போர்ட்ஸ் டைம்ஸ் எனும் பத்திரிகை “இங்கிலாந்து கிரிக்கெட் இறந்து விட்டது. அதனுடைய உடல் எரிக்கப்பட்டு சாம்பல் (ஆஷஸ்) ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று பகிரங்கமான தலைப்புச் செய்தியை வெளியிட்டது. அதனால் அடுத்த தொடரில் கொதித்தெழுந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இவோ பிளிக் அந்த சாம்பலை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதே எங்களுடைய லட்சியம் என்று பேட்டியை கொடுத்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

கௌரவமான ஆஷஸ்:
அப்போதிலிருந்து ஆஷஸ் கோப்பை என்று பெயர் பெற்ற அத்தொடரை வெல்வதற்கு அந்த இரு நாடுகளும் ஆக்ரோசத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக மோதி வருகின்றன. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தானை மிஞ்சும் பரம எதிரிகளாக இந்த கோப்பையை வெல்வதை கௌரவமாக இரு நாடுகளும் கருதும் என்பதால் இத்தொடரில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் தற்போது இந்த தொடரில் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக களமிறங்குவதுடன் சமீபத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை தோற்கடித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனலை வென்று உலக சாம்பியனாகவும் விளையாட உள்ளது.

மறுபுறம் சமீப காலங்களில் தடுமாறிய இங்கிலாந்து பிரண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து கடந்த வருடம் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதனால் இம்முறை ஒரு கை பார்த்து விடுவோம் என்று ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் உங்கள் ஆட்டமெல்லாம் பாகிஸ்தான், இந்தியா போன்ற அணிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலர்களைக் கொண்ட எங்களிடம் வேலைக்காகாது என்று எச்சரித்துள்ளது. அப்படி ஆரம்பத்திலேயே வார்த்தைப் போர் துவங்கியுள்ளதால் அனல் பறக்கும் என்று கருதப்படும் இந்த தொடரில் கௌரவத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

1. அந்த வகையில் நூற்றாண்டை கடந்து நடந்து வரும் இந்த பழமை மிகுந்த தொடரில் இதுவரை மொத்தம் 356 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 150 போட்டிகளில் அசால்டாக வென்று அந்த காலம் முதலே வெற்றிகரமான அணியாக ஜொலித்து வருகிறது. மறுபுறம் இங்கிலாந்து 110 போட்டிகளில் வென்றுள்ள நிலையில் 96 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

2. மேலும் மொத்தமாக இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலியா 34 தொடர்களையும் இங்கிலாந்து 32 தொடர்களையும் வென்றன. 6 தொடர்கள் சமனில் முடிந்தன.

Stokes

3. இத்தொடர் நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் இதுவரை இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் இங்கிலாந்து 53 முறை வென்று வலுவாக செயல்பட்டுள்ளது. அதே போல் ஆஸ்திரேலியா 51 போட்டுகளில் வென்று பதிலடி கொடுத்துள்ள நிலையில் 67 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

4. அத்துடன் கடந்த 10 ஆஷஸ் தொடர்களில் இங்கிலாந்து 5 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளையும் பெற்றது. 1 தொடர் டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் இல்லாததால் இவரே இனி தொடர்ந்து விக்கெட் கீப்பராக இருப்பார் – பி.சி.சி.ஐ திட்டம்

ஜீன் 16, 28, ஜுலை 6, 19, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்க உள்ளது. இத்தொடரின் போட்டிகளை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களிலும் சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாகவும் கண்டு களிக்கலாம்.

Advertisement