போற போக்க பார்த்தா தோனி சொன்னது நடந்துரும் போலயே, உலகமே வியக்கும் வகையில் ஆஸி மண்ணில் மாஸ் காட்டும் கிங் கோலி

Kohli dhoni
Advertisement

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த வெற்றி நடைக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார் என்ற கூறலாம். கடந்த 15 வருடங்களாக ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 33 வயதிலேயே ஜாம்பவானாக தன்னை நிரூபித்துள்ள அவரை 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் இதே உலக கோப்பையிலிருந்து நீக்குமாறு விமர்சித்தார்கள்.

ஆனால் அதற்காக கவலைப்படாமல் கடினமாக உழைத்த அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். அதே பார்மை இந்த உலகக் கோப்பையிலும் தொடரும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கதை முடிந்தது என்று ரசிகர்கள் கவலையடைந்த போது காலத்திற்கு மறக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை தீபாவளி பரிசாக அளித்தார்.

- Advertisement -

தோனியின் கணிப்பு:
அத்துடன் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் 62* ரன்கள் குவித்த அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தடுமாறினாலும் வங்கதேசத்துக்கு எதிராக கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் அற்புதமாக செயல்பட்டு 64* (44) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இந்த டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் (220*) குவித்த பேட்ஸ்மேன், ஒட்டுமொத்த டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் (1065) என ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்தார்.

1. அதை விட அந்த சாதனைகளையும் வெற்றியையும் தமக்கு மிகவும் பிடித்த அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் அவர் படைத்தது கூடுதல் சிறப்பம்சமாகும். ஆம் உலகில் எத்தனையோ மைதானங்கள் இருந்தாலும் விராட் கோலி இதுவரை அடித்துள்ள 71 சதங்களில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தான் அதிகபட்சமாக 5 சதங்களை அடித்துள்ளார். சொந்த மண்ணில் கூட அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் அவர் 4 சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

2. அத்துடன் இந்த மைதானத்தில் தான் விராட் கோலி முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை (116) அடித்தார். இங்குதான் கடந்த 2014ஆம் ஆண்டு தோனி காயமடைந்ததால் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த முதல் போட்டியிலேயே 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து (115, 141) சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

3. இங்கு தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2015 உலகக் கோப்பையில் சதமடித்து (107) அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்படி ஏராளமான வரலாற்று நினைவுகளை கொண்டுள்ள விராட் கோலி இந்த மைதானத்தில் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து முறையே 116, 22, 18, 15, 115, 141, 107, 90*, 3, 34, 104, 74, 4, 64* என 14 இன்னிங்ஸ்சில் 5 சதங்கள் 3 அரை சதங்கள் உட்பட 904 ரன்களை 75.34 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார்.

- Advertisement -

4. இப்படி அடிலெய்ட் மைதானத்தில் எப்போதுமே சிறப்பாக செயல்படும் விராட் கோலி உலகிலேயே தமக்கு மிகவும் பிடித்த வெளிநாட்டு மைதானம் இதுவென்று ஏற்கனவே கூறியுள்ளார்.

பொதுவாகவே ஒரு பிரபல நகரை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் பெரிய சாதனைகளை படைத்தால் அந்த நகரில் இருக்கும் மைதானத்திற்கு அல்லது அதனுடைய ஒரு பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டுவார்கள். அந்த வகையில் அடிலெய்ட் மைதானத்தில் இப்படி அனைவரும் வியக்கும் அளவுக்கு அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியின் பெயரை அந்த மைதானத்தின் ஒரு பகுதிக்கு (ஸ்டேண்ட்) அந்த மைதான நிர்வாகம் சூட்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டே அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கூறியிருந்தார்.

ஆனால் பொதுவாக வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு அந்த கௌரவம் கிடைக்காது என்றாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் (3300) சாதனையை தகர்த்துள்ள விராட் கோலியின் (3350*) பெயரை தங்களது மைதானத்தின் ஒரு பகுதிக்கு அடிலெய்ட் மைதான நிர்வாகம் சூட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் போற போக்கை பார்த்தால் வரும் காலத்தில் தோனி அன்றே கணித்தது நிச்சயமாக நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள்.

Advertisement