
நாக்பூர் நகரில் ஜனவரி 21-ம் தேதியான நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியிருந்தது.
பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பந்து வீசியிருந்த அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் இந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து வீசியது குறித்தும் இனிவரும் போட்டிகளில் எவ்வாறு செயல்படப்போகிறேன்? என்பது குறித்தும் சில கருத்துக்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் எப்பொழுதுமே இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ? என்னுடைய உழைப்பில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இதையும் படிங்க : பும்ராவுக்கும், பாண்டியாவுக்கும் நியூசிலாந்து டி20 தொடரில் ஓய்வு குடுங்க.. சரியான காரணத்தை சொன்ன – சீக்கா
அப்படி எனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது நான் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதுவே என்னுடைய வேலை. செலக்சன் என்பது நம் கையில் இல்லை ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் மிகச் சிறப்பாக இருக்கிறது என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.