
இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.
முன்னதாக இந்தத் தொடரில் குல்தீப் யாதவ், சஹால் ஆகிய 2 மூத்த ஸ்பின்னர்கள் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. அதற்கு பதிலாக தேர்வான ரவி பிஸ்னோய் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சாப்பிடுவதற்கு வேகம்:
2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் அசத்தினார். அதனால் இந்தியாவுக்காக தேர்வான அவர் இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இருப்பதிலேயே ரவி பிஸ்னோய் தான் முதல் ஆளாக வேகமாக சாப்பிட்டி முடிப்பார் என்ற கலகலப்பான பின்னணியை அர்ஷ்தீப் சிங் பகிர்ந்துள்ளார்.
அதே போல கடினமாக உழைக்கும் அவர் வேகமாக விக்கெட்டுகளையும் எடுப்பதாக அர்ஷ்தீப் பாராட்டியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “ரவி பிஸ்னோய் மிகப்பெரிய இதயத்தை கொண்டவர். அதனாலேயே அவர் நிறைய தைரியமான பந்துகளை வீசுவார். அதற்கான பரிசுகளை அவர் தற்போது பெறுகிறார். தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் நன்றாக விளையாடியுள்ளார்”
“குறிப்பாக முதல் போட்டியில் அடி வாங்கிய அவர் கடைசியில் விக்கெட் எடுத்து வலுவான கம்பேக் கொடுத்தார். 2வது போட்டியிலும் அசத்திய அவர் அதற்காக பின்னணியில் கடினமாக உழைக்கிறார். நானும் அவரும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நல்ல உறவை கொண்டுள்ளோம். ஆனால் ரவி பிஸ்னோய் எப்போதும் அவசரம் பிடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது”
இதையும் படிங்க: இலங்கைக்கு அந்த தகுதியில்ல.. ஹஸரங்கா ஒன்னும் பும்ரா கிடையாது போய் உட்காருங்க.. பசித் அலி விளாசல்
“அவர் தன்னுடைய உணவை மிகவும் வேகமாக சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும் அவர் வேகமாக தனது ஹோட்டல் அறைக்கு சென்று விடுவார். அப்படி இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் அவர் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்” என்று கூறினார். அதை ஒப்புக்கொண்ட ரவி பிஸ்னோய் சிறுவயதிலிருந்தே அந்த பழக்கம் தம்மிடம் உள்ளதாக அதே வீடியோவில் கூறினார். அதை நிறுத்த முயற்சித்தும் தம்மால் இன்னும் முடியவில்லை என்றும் பிஸ்னோய் கூறியது குறிப்பிடத்தக்கது.