2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிரவரும் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் என எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.
முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தவுள்ள சாதனை :
இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் முதன்மை வீரராக விளையாடி வரும் அவர் டி20 போட்டிகளை பொருத்தவரை நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலும் இவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அர்ஷ்தீப் சிங் மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் முதல் இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : வெள்ள தாடி வந்துட்டா ரிட்டயர்டு ஆயிடுவாரா? விராட் கோலி குறித்து பரவும் வதந்திக்கு – நவ்தீப் சைனி பதிலடி
இந்நிலையில் மேலும் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் நிகழ்த்துவார். நிச்சயம் அது ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே நடக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



