
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அடுத்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. கான்பெரா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டது பல இந்திய ரசிகர்களை கோபமடைய வைப்பதாக அமைந்தது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அந்த ஒரே காரணத்திற்காக பயிற்சியாளராக வந்ததிலிருந்து அவருக்கு கௌதம் கம்பீர் 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்புகளை அள்ளித் தந்து வருகிறார்.
அந்த வாய்ப்பில் கடந்த சிட்னி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த ராணா ஓரளவு அசத்தினார். மற்ற படி அழுத்தமான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு ராணா இந்தியாவை வெற்றி பெற வைத்தார் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மறுபுறம் 2022இல் அறிமுகமான அர்ஷ்தீப் சிங் 3 வருடத்திற்குள் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு இத்தொடரின் முதல் போட்டியிலேயே கௌதம் கம்பீர் வாய்ப்பளிக்காமல் பெஞ்சில் அமர வைத்துள்ளார். அது போக ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் எப்போதுமே மிட்சேல் ஸ்டார்க் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்பெஷலாக வாய்ப்பளிப்பார்கள்.
அதையும் கருத்தில் கொள்ளாத கௌதம் கம்பீர் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. நியாயமாக பார்த்தால் 100 டி20 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர், இடது கை பவுலர் ஆகியவற்றின் அடிப்படையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் 100 விக்கெட்டுகளை மதிக்காத கெளதம் கம்பீர் தாம் வைப்பதே சட்டம் என்ற வகையில் ஒரே போடாக அர்ஷ்தீப்பை கழற்றி விட்டுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கும் அவருக்கும் தான் போட்டியே.. 2027 உ.கோ இந்திய அணியில் 8வது இடத்தை பிடிப்பேன்.. தாக்கூர் நம்பிக்கை
அதைப் பார்க்கும் ரசிகர்கள் இதற்கு மேல் ஒரு வீரர் இந்திய அணியில் இடத்தைப் பிடிக்க என்ன தான் செய்ய வேண்டும்? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் ஹர்ஷித் ராணா போல தற்போதைய இந்திய அணியில் புதுமுக வீரர்கள் யாருக்கும் இவ்வளவு ஆதரவு கிடைக்காது என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து ராணாவை நிரந்தர வீரராக உருவாக்க கம்பீர் முயற்சிக்கிறார் என்றால் மிகையாகாது.