- Advertisement -
இந்திய கிரிக்கெட்

48 விக்கெட்ஸ்.. புவனேஸ்வர் குமாரை முந்திய அர்ஷ்தீப்.. நியூ பால் ஸ்பெஷலிஸ்டாக வரலாற்று சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் போராடி 61 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணி 15.5 ஓவரிலேயே 120/5 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 35, சுப்மன் கில் 28, திலக் வர்மா 25* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

புவியை முந்திய அர்ஷ்தீப்:

அதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 – 1* இந்திய அணி என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4வது பந்தில் ரீசா ஹென்றிக்ஸை டக் அவுட்டாக்கினார். அதையும் சேர்த்து தனது கேரியரில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் அவர் 48* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே (1 – 6) ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதற்கு முன் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் இந்தியாவுக்காக 83 டி20 இன்னிங்ஸில் பவர்பிளே ஓவர்களில் 47 விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனை. தற்போது 68 இன்னிங்ஸிலேயே 48 விக்கெட்டுகளை எடுத்துள்ள அர்ஷ்தீப் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்:

அவர்களுக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா பவர்பிளே ஓவர்களில் 31 விக்கெட்டுகளை எடுத்து 3வது இடத்தில் இருக்கிறார். இதிலிருந்து பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை அள்ளக்கூடிய நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்டாக அர்ஷ்தீப் சிங் திகழ்கிறார் என்றே சொல்லலாம். அத்துடன் புவனேஸ்வர் குமார் இடத்தில் இந்திய அணிக்கு மற்றொரு தரமான ஸ்விங் பவுலராகவும் அவர் கிடைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நான் சொல்றத நம்புங்க.. 2026 டி20 உ.கோப்பையில் அவர் இந்தியாவை ஜெய்க்க வைப்பாரு.. அபிஷேக் ஆதரவு

இது போக ஏற்கனவே இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் அர்ஷ்தீப் படைத்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பையில் மட்டும் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது.

- Advertisement -