இதே ரசிகர்கள் போன வாரம் பாராட்டுனாங்க, விமர்சனங்களுக்கு அர்ஷிதீப் கோச் பதிலடி

Arshdeep-Singh
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் செப்டம்பர் 4ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற முதல் சூப்பர் 4 போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலியை தவிர ரோகித் சர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதும் தினேஷ் கார்த்திகை கழற்றி விட்ட தவறான அணி தேர்வும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

அதேபோல் 19வது ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது 19 ரன்களை பொறுப்பின்றி வாரி வழங்கிய சீனியர் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட அனைவரும் இணைந்தே தோல்விக்கு காரணமாக அமைந்தனர். ஆனால் 18வது ஓவரில் 0 ரன்களில் ரன்களில் இருந்த போது ஆசிப் அலி கொடுத்த கேட்சை இளம் வீரர் அர்ஷிதீப் சிங் தவற விட்டது தான் தோல்விக்கு மொத்த காரணம் என்ற வகையில் சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்தார்கள். அதிலும் சில ரசிகர்கள் வழக்கம் போல கெட்ட வார்த்தைகளால் எல்லை மிஞ்சிய கடும் சொற்களை பயன்படுத்தி திட்டினார்கள்.

- Advertisement -

தரமான அர்ஷிதீப்:
ஆனால் அதே போட்டியில் கடைசி ஓவர் உட்பட 3.5 ஓவரில் 27 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அவர் அந்த கேட்ச் தவிர எஞ்சிய தருணங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்குப் போராடினார். அதனால் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பரபரப்பான தருணங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது சாதாரணம் என்ற வகையில் விராட் கோலி முதல் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் வரை ஏராளமானவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக இதே துபாய் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய போது அரஷ்தீப் சிங்கை இதே ரசிகர்கள் பாராட்டியதாக அவருடைய பயிற்சியாளர் ஜஸ்வந்த் ராய் பதிலடி கொடுத்துள்ளார். எனவே விளையாட்டில் அடுத்த நாளே எதுவும் மாறக்கூடும் என்று தெரிவிக்கும் அவர் அந்த கேட்ச்சை வேண்டுமென்று அவர் விட்டிருக்க மாட்டார் என்பதால் இவ்வளவு விமர்சனங்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்ச்சை தவறி விட்டதற்காக கிண்டலடிக்க பட்டிருக்கக்கூடாது. விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம் என்ற நிலைமையில் அதன் பின்பும் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. அதே சமயம் வெற்றி பெறும் விதத்தில் விளையாடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நாம் பாராட்ட வேண்டும். எனவே போட்டிகளை மிகுந்த ஆர்வத்துடன் பாருங்கள் ஆனால் அதற்காக அதில் விளையாடும் வீரர்களைக் கிண்டலடிக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”

“இந்தியாவில் இருக்கும் மக்கள் கிரிக்கெட்டின் மீது உணர்வுபூர்வமாக ஈடுபாடு வைத்துள்ளார்கள். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அனல் பறக்கும் போட்டியை அவர்கள் உணர்வுபூர்வமாக மதிக்கிறார்கள். ஆனால் விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் ஒரு அங்கமாகும். இன்று கிண்டலடிக்கும் இதே ரசிகர்களும் மக்களும் தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தபோது பாராட்டினார்கள். எனவே ஒரு கேட்ச்சை தவற விட்டதற்காக அவரைத் திட்டுவது சரியல்ல” என்று கூறினார்.

அதை ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள அர்ஷ்தீப் சிங் பதிவு இந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக உள்ளது. அத்துடன் வரலாற்றில் 100, 200 போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்த வீரர்கள் கூட இதை விட முக்கியமான பைனல் போன்ற போட்டிகளில் கேட்ச்களை தவற விட்டு உலக கோப்பையையும் தாரைவார்த்த கதைகள் உள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அர்ஷிதீப் சிங் ஒரு கேட்ச்சை தவற விட்டதற்காக இவ்வளவு விமர்சனங்கள் தேவையில்லை என்பதுடன் இது போன்ற தோல்விப் படங்கள்தான் நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாகி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்படுவதற்கான பாடங்களை அவருக்குக் கற்றுக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement