இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவை கைது செய்ய அந்நாட்டு போலீஸ் காத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த இலங்கை வீரர்களில் ஒருவராக போற்றப்படும் அவரது தலைமையில் இலங்கை அணி 1996 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர் சிறிது காலம் கழித்து அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
தற்போது 2017 காலகட்டங்களில் பெட்ரோலிய அமைச்சராக இருந்த அவர் ஊழல் செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப வருடங்களாகவே இலங்கை அரசு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அனுர குமார திசாநாயகா ஊழல்வாதிகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.
விரைவில் ரணதுங்கா கைது:
அதன் படி புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர் தங்களது நாட்டில் ஊழல் செய்தவர்களை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக 2017ஆம் ஆண்டு பெட்ரோலிய அமைச்சராக இருந்த ரணதுங்கா 27 கொள்முதல்களை முறைகேடாக அதிக விலைக்கு செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய அவர் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான நடைமுறையை மாற்றி அமைத்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் இலங்கை அரசுக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே ஊழல் குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது ரணதுங்கா வெளிநாட்டில் இருந்து வருகிறார். எனவே இலங்கை திரும்பியதும் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காத்திருக்கும் இலங்கை போலீஸ்:
அதே போல ரணதுங்காவின் மூத்த சகோதரர் தமிக்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராக இருந்த போது ஊழல் செய்ததும் கண்டறியப்பட்டது. அதற்காக ஏற்கனவே கைது திங்கட்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை இலங்கை விட்டு வெளியே பயணம் செல்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி இதை செய்யும் கில்லை திட்டாதீங்க.. சூரியகுமார் ஃபார்ம் கவலையில்.. தீப்தாஸ் குப்தா
இது மட்டுமின்றி ரணதுங்காவின் மற்றொரு சகோதரர் மற்றும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்னாவும் காப்பீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இது பற்றி முழு விபரங்கள் ஃஏபிஎப் இணையத்தில் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் கிரிக்கெட்டில் நாட்டுக்காக உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் ரணதுங்கா மிகப்பெரிய ஊழல் செய்து கைது செய்யப்படுவதற்காக காத்திருக்கிறார் என்பது இலங்கை ரசிகர்களிடம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.



