ஏபிடி செல்பிஷ் பிளேயர் தான், என்ன சாதிச்சாரு? அங்க யார் வேணாலும் அடிக்கலாம் – கம்பீர் தடாலடி விமர்சனம்

Gautam Gambhir
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முன்னதாக கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் இன்று விஸ்வரூப வளர்ச்சி காண்பதற்கு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து முக்கிய பங்காற்றிய கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் கடந்த வருடம் முற்றிலுமாக ஓய்வு பெற்றார்கள்.

இந்த மூவருமே தங்களது தனித்துவமான திறமைகளால் தங்களது அணிகளுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட இவர்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி அதை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சிறிய விவாத நிகழ்ச்சியை கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கம்பீர் தடாலடி:
தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் இடையே விவாதிக்கப்பட்டு வரும் அந்த நிகழ்ச்சியில் நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் கருத்துக்களை தெரிவித்து சிறந்தவர் யார் என்பதை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரிடையே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் 205 போட்டிகளில் 5528 ரன்களை விளாசி சென்னை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரெய்னா ரசிகர்கள் மற்றும் வல்லுனர்களால் மிஸ்டர் ஐபிஎல் என்று கொண்டாடப்படுகிறார்.

அதே போல் பெரும்பாலான சூழ்நிலைகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உருண்டு பிரண்டு புதுப்புது ஷாட்டுகளை விளாசி மைதானத்தின் 360 டிகிரி திசைகளிலும் அதிரடியாக பேட்டிங் செய்து பெங்களூரு அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள ஏபி டீ வில்லியர்ஸ் 5162 ரன்களை குவித்து ஜாம்பவானாகவும் மிகச் சிறந்த பினிஷராகவும் ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலும் தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் ஏபி டீ வில்லியர்ஸ் தன்னிச்சையான சாதனைகளை மட்டுமே படைத்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக தனது அணிக்கு ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காத அவர் என்ன சாதித்து விட்டார் என்ற வகையில் கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு.

“ஐபிஎல் தொடரில் ஏபி டீ வில்லியர்ஸ் தனது சொந்தப் பெயரில் தன்னிச்சையான சாதனைகளை மட்டுமே வைத்துள்ளார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் யார் வேண்டுமானாலும் அந்த ரன்களை எளிதாக அடித்து சாதனைகளை படைக்கலாம்” என்று கூறினார். அருகில் முகமது கைஃப் இருந்த நிலையில் மேற்கொண்டுவிட்டால் இன்னும் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பார் என்று நினைத்த தொகுப்பாளர் உடனடியாக கம்பீரை அமைதிப்படுத்தினார்.

- Advertisement -

அதை பார்க்கும் ரசிகர்கள் தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் உங்களால் ஏன் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்று புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் 11 போட்டிகளில் 302 ரன்களை 30.02 என்ற சராசரியிலும் 126.36 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ள கௌதம் கம்பீர் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஷிகர் தவானின் 12 வருட சாதனையை தூளாக்கி – இராணி கோப்பையில் 2 மெகா சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

மறுபுறம் அதே மைதானத்தில் 61 போட்டிகளில் 1960 ரன்களை 43.56 என்ற சராசரியிலும் 161.18 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ள டீ வில்லியர்ஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். எனவே வழக்கம் போல வாய்க்கு வந்ததை பேசாமல் அவரவர் திறமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கம்பீரை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement