இந்திய அணி அடுத்ததாக தற்போது இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 13ஆம் தேதி துவங்க இருந்த இந்த தொடரானது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது 18ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் இளம் வீரர் ஒருவருக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
இந்த தொடருக்கான அணியில் துவக்க வீரராக அணியில் இடம் பெற்றிருக்கும் 21 வயதான ப்ரித்வி ஷா தனது சிறிய கிரிக்கெட் கரியரில் பெரிய கவனத்தை ஈர்த்தவர். இந்த இலங்கை தொடரில் 6 போட்டிகளிலும் நிச்சயம் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 827 ரன்கள் குவித்தது மட்டுமின்றி முச்சதமடித்து அசத்திய அவர் ஐபிஎல் தொடரிலும் முதற்பாதியில் 300 ரன்களை அடித்துள்ளார். இதன் காரணமாக அவர் நிச்சயம் இந்த இலங்கை அணிக்கு எதிராக ரன்களை குவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1-2 வருடங்களாகவே அவருக்கு மோசமாகவே அமைந்திருந்தது. மேலும் 8 மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார். அதன் பிறகு சச்சின் மற்றும் மும்பை பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே ஆகியோருடைய உதவியால் தற்போது தன்னைத்தானே மாற்றிக்கொண்டு பலமாக திரும்பியுள்ளார். இந்நிலையில் ப்ரித்வி ஷா குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் கூறுகையில் :
இந்த இலங்கை தொடரானது ப்ரித்வி ஷாவிற்கு மிக முக்கியமானதாகும். அவர் ஒரு திறமையான பிளேயர் தான். அவரால் ரன்களைக் குவிக்க முடியும் அதே போன்று தேசிய அணிக்காக நீண்டநாட்கள் விளையாடும் திறமையும் அவரிடம் இருக்கிறது. முதலில் இந்திய அணிக்கு தேர்வான அவர் பிறகு தனது இடத்தை தக்க வைக்க தவறிவிட்டார். ஏனெனில் அவரிடம் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் அல்லது அரோகன்ஸ் ஆகியவை இருக்கக் கூடாது. இந்த சில காரணங்களினால் தான் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்திய அணியின் சிறந்த வீரர்களை பார்த்தால் டெண்டுல்கர், டிராவிட், விஸ்வநாத் போன்றவர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள். மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் அதனாலேயே அவர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். எனவே அவர்களைப் பின்பற்றி ப்ரித்வி ஷாவும் நடக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.