வீடியோ : யாரு சாமி நீ? 117 ரன்கள் 4 விக்கெட்கள், கடைசி ஓவரில் மேஜிக் நிகழ்த்தி – ருதுராஜ் அணியை சாய்த்த 18 வயது இளம் வீரர்

Arshin Kulkarni
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் 2023 டி20 தொடர் நிறைவு பெற்றாலும் தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 எனும் புதிய தொடர் இந்த வருடம் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இருக்கும் தரமான இளம் வீரர்களை அடையாளப்படுத்தி வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்தில் நடைபெற்று வரும் அந்த தொடரில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் மற்றும் புனேரி பாஃப்பா ஆகிய அணிகள் மோதின.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாசிக் அதிரடியாக செயல்பட்டு 20 ஓவர்களில் 203 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு இளம் வீரர் அர்சின் குல்கர்னி பவுண்டரிகளையும் சிக்சர்களை அடித்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரசிகர்களிடம் புகழ்பெற்ற ருதுராஜ் கைக்வாட் தலைமை தாங்கிய புனேரி அணி பவுலர்களை பந்தாடிய அவர் சுபம் கோத்தாரி வீசிய 5வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் உட்பட 21 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

மிரட்டிய இளம் வீரர்:
அதே வேகத்தில் வெறும் 24 பந்துகளிலேயே அரை சதமடித்து நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி கேப்டன் ராகுல் திரிபாதியுடன் இணைந்து அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் மொத்தமாக வெறும் 3 பவுண்டரியும் 13 சிக்சர்களையும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து சதமடித்தார். குறிப்பாக 72 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை புனேரி வீரர் பவன் ஷா கோட்டை விட்டதற்காக நாள் முழுவதும் வருந்தும் அளவுக்கு வெளுத்து வாங்கிய அவர் மொத்தமாக வெறும் 54 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய புனேரி அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். குறிப்பாக பேட்டிங்கில் சதமடித்த குல்கரனி பந்து வீச்சிலும் அந்நியனாக மாறி 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலை கொடுத்தார். அதனால் 6 விக்கெட்டுகளை சரிந்து தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் ருதுராஜ் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 23 பந்துகளில் அரை சதம் கடந்து வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

இருப்பினும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் முக்கிய நேரத்தில் அவுட்டான அவருக்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் முடிந்தளவுக்கு போராடினர். அதன் காரணமாக வெற்றியை நெருங்கிய புனேரி அணிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது மீண்டும் பந்தை கையில் எடுத்து ஹீரோவாக செயல்பட்ட குல்கர்னி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து 1 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் நாசிக் அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

அந்த வகையில் வெறும் 18 வயது மட்டுமே நிரம்பியுள்ள அர்சிம் குல்கர்ணி இந்த போட்டியில் பேட்டிங்கில் 13 சிக்சர் உட்பட 117 (54) ரன்களும் 4 முக்கிய விக்கெட்டுகளும் எடுத்து கடைசி ஓவரில் மேஜிக் வெற்றியை உறுதி செய்து மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக மொத்த போட்டியையும் தனது பேரில் எழுதி ருதுராஜ் கைக்வாட் அணியை தனி ஒருவனாக சாய்த்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:2004இல் தோனிக்கு அவர் மட்டும் தான் போட்டியா இருந்தாரு, ஆனா இன்று இவர் ஜாம்பவானா வந்துட்டாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

அதனால் நிறைய ரசிகர்கள் யார் சாமி நீ என்று வருங்காலத்தில் அசத்த போகும் அந்த இளம் வீரரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். அதே போல பொதுவாக தொடக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் அணியின் நலனுக்காக இந்த போட்டியில் கேப்டனாக தன்னுடைய இடத்தை இதர வீரர்களுக்கு கொடுத்து மிடில் ஆர்டரில் களமிறங்கி அரை சதமடித்து வெற்றிக்கு போராடியதை சென்னை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement