2004இல் தோனிக்கு அவர் மட்டும் தான் போட்டியா இருந்தாரு, ஆனா இன்று இவர் ஜாம்பவானா வந்துட்டாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலக கோப்பைகளை என்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவராக திகழ்கிறார். குறிப்பாக கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து பள்ளி படிக்கும் போது கோல் கீப்பராக இருந்தாலும் பயிற்சியாளரின் ஆலோசனையால் விக்கெட் கீப்பராக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அவர் இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் ரயில் டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டியில் விளையாட துவங்கினார். அதில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2004ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் டக் அவுட்டானார்.

இருப்பினும் குறுகிய காலத்திலேயே அதிரடியாக செயல்பட்ட அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் நிரந்தர விக்கெட் கீப்பராக உருவெடுத்தார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது அதிரடியாக செயல்பட்டு ரன்களை எடுத்து வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கு இலக்கணமாக அமைந்த அவர் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்து அனுபவுமில்லாத போதிலும் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இளம் அணியை சிறப்பாக வழி நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து பரம எதிரி பாகிஸ்தானை ஃபைனலில் தோற்கடித்து கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

தோனியின் போட்டி:
அத்துடன் 2010இல் தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியாவை முன்னேற்றிய அவர் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து உலகக்கோப்பையை வென்று 2013இல் தாம் உருவாக்கிய இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று காட்டினார். மேலும் பல போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்த அவர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து வரலாற்றில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் ஃபினிஷராகவும் விடை பெற்றுள்ளார்.

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு தோனிக்கு போட்டியாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முன்கூட்டியே இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்ற போதிலும் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மறுபுறம் தினேஷ் கார்த்திக்கை போட்டியாக நினைக்காத தோனி தமது ஸ்டைலில் விளையாடி பெரிய அளவில் வளர்ந்ததாக பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியது பின்வருமாறு. “2004இல் கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இந்தியா ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அத்தொடர்களில் எம்எஸ் தோனி ரிசர்வ் கீப்பராகவும் தினேஷ் கார்த்திக் விளையாடும் 11 பேர் அணியிலும் இடம் பெற்றனர்”

- Advertisement -

“ஒருமுறை அவர் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராக வலைப்பயிற்சியில் பந்து வீசினார். அப்போது நான் “நீங்கள் ஏன் அவருக்கு பந்து வீசுகிறீர்கள்? அவர் தான் உங்களுடைய போட்டியாக இருக்கிறார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் நீங்கள் விக்கெட் கீப்பிங் அல்லது பேட்டிங் மட்டும் செய்யுங்கள் ஏன் பவுலிங் செய்கிறீர்கள்” என்று தோனியிடம் கேட்டேன். அதற்கு “என்னை தடுக்காதீர்கள். நான் பந்து வீச விரும்புகிறேன். ஒருவேளை நீங்களும் பேட்டிங் செய்ய நினைத்தால் செய்யுங்கள். நான் உங்களுக்கும் பந்து வீசுகிறேன்” என்று பதிலளித்தார்.

“அந்த தருணத்தை தற்போது திரும்பி பார்க்கும் போது அவரால் மட்டும் எந்தளவுக்கு இப்படி சாதிக்க முடிந்தது என்பதை புரிந்து கொள்கிறேன். குறிப்பாக அவர் தினேஷ் கார்த்திக் அல்லது யாரையும் எதிர்த்து போட்டியிட விரும்பாமல் தன்னுடன் போட்டியிட்டார். எனவே இது நமக்கு நல்ல பாடமாக இருக்கிறது. அதாவது நீங்கள் சிறந்த பதிப்பாக இருந்து உங்களுக்கு நீங்களே பெரிய போட்டியளராக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:என்னை விட இதய பிரச்சனை கொண்ட எங்க அப்பா தான் ரொம்ப கவலைப்பட்டாரு – அஸ்வின் பேட்டி

முன்னதாக 2004இல் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் 2018 நிதிஹாஸ் கோப்பை ஃபைனல் தவிர்த்து 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் முதல் 2022 டி20 உலகக் கோப்பை வரை பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement