ரோஹித் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய அறிமுக வீரர் – யார் இந்த அன்மோல்ப்ரீத் சிங் ?

Anmol-1
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்திற்கான முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் இடம் பெறாததால் பொல்லார்டு தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற அந்த அணியின் துவக்க வீரர் கெய்க்வாட்டின் (88) சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 156 ரன்களை எடுத்தது.

cskvsmi-1

- Advertisement -

பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா விளையாடாததன் காரணமாக அந்த அணியின் அறிமுக வீரராக அன்மோல்ப்ரீத் சிங் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் தனது இன்னிங்சை சிறப்பாக தொடங்கியிருந்தாலும் தீபக் சாகரின் நக்குல் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

தனது முதல் இன்னிங்சில் 16 ரன்களை மட்டுமே அடித்த இவர் குறைவான ரன்கள் குவித்து இருந்தாலும் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் யார் இந்த அன்மோல்பிரீத் சிங் என்ற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. அதன்படி அதற்கான விளக்கத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். 23 வயதான அன்மோல்பிரீத் சிங் பஞ்சாப் அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் வலது கை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படும் திறனுடையவர்.

anmol

2016 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையிலும் இவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமானவர் இவர் தனது மூன்றாவது போட்டியிலேயே (267 ரன்கள்) சத்தீஸ்கர் அணிக்கு எதிராக அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அந்த ரஞ்சி தொடரில் 5 போட்டிகளில் 753 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த வீரராகவும் திகழ்ந்தார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு துலீப் டிராபி, அதன்பிறகு 2019ஆம் ஆண்டு இந்திய ஏ அணிக்காக தியோதர் டிராபி தொடர்களிலும் இவர் விளையாடியுள்ளார்.

Anmol-2

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மும்பை அணியுடன் பயணித்து வந்தாலும் தற்போதுதான் சிஎஸ்கே அணிக்கெதிராக இவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. தனது அறிமுகம் வாய்ப்பிலேயே இம்ப்ரஸ் செய்த இவர் அவ்வப்போது மும்பை அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement