
இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த இந்திய அணியானது அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியிருந்தது. இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்ததால் அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரரான சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ரோகித் சர்மாவோடு சேர்த்து இந்த தொடருக்கு முன்னதாக அனுபவ வீரரான விராத் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனுபவ வீரர்கள் இன்றி புதிய கேப்டனின் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது அங்கு எவ்வாறு செயல்படப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் மீண்டும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பெற்று விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டனான அணில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : என்னை பொருத்தவரை குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற விரும்பினால் நிச்சயம் அதில் குல்தீப் யாதவின் பங்கு என்பது அதிகமாக இருக்கும்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் போன்ற ஆல்ரவுண்டர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களை தாண்டி ஒரு முழுமையான ஸ்பின்னராக குல்தீப் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். அவரது தனித்துவமான பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுப்பது மட்டுமின்றி விக்கெட்டுகளையும் கைப்பற்றி கொடுக்கும்.
இதையும் படிங்க : பாக் அணிக்கெதிரான சூப்பர் 4 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
எனவே குல்தீப் யாதாவிற்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குங்கள் என்று அணில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். 30 வயதான குல்தீப் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.