
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக நவம்பர் 15-ம் தேதி அன்று அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவித்த வீரர்களையும், தக்க வைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதேவேளையில் அதற்கு முன்னதாக டிரேடிங் முறையிலும் சில வீரர்களின் அணி மாற்றம் நடைபெற்று முடிந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடையேயான டிரேடிங்கும் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல ஆண்டுகளாக நட்சத்திர வீரராக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு வழங்கிவிட்டு ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற விரும்பிய சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றது நல்ல நகர்வு என்றும் சி.எஸ்.கே ரவீந்திர ஜடேஜா விடயத்தில் செய்தது ஆச்சரியமாக இருப்பதாகவும் முன்னாள் இந்திய வீரரான அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ரவீந்திர ஜடேஜா மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு வந்தது ஒரு நல்ல நகர்வு. சிஎஸ்கே அணி பொதுவாகவே அவர்களது நட்சத்திர வீரர்களை எளிதாக விட்டுக் கொடுக்காது ஆனாலும் ரவீந்திர ஜடேஜாவை அவர்கள் எப்படி விட்டுக் கொடுத்தார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தது ஒரு நல்ல விடயம் தான்.
இதையும் படிங்க : அவர் விரும்பினாலும், அவரோட உடம்பு ஒத்துழைக்கல.. சுப்மன் கில் விலகல் குறித்து – ரிஷப் பண்ட் பேட்டி
அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் ராஜஸ்தான் அணிக்கு சென்றது ஒரு நல்ல நகர்வு. ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் நான் கருதுகிறேன் என அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.