ஐபிஎல் 2022 : தேவையான அவரை எப்படியாவது வாங்கிடுங்க – மும்பை அணிக்கு அனில் கும்ப்ளே பரிந்துரைக்கும் ஜிம் வீரர் யார்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறுகிறது. அதற்காக டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து களமிறங்கும் 405 கிரிக்கெட் வீரர்களில் தங்களுக்கு தேவையானவர்களை வாங்கிக் கொண்டு புதிய சீசனில் கோப்பையை வெல்வதற்கு அனைத்து 10 அணிகளும் தயாராக உள்ளன. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சரித்திரம் படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் தொடர் தோல்விகளை சந்தித்து வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரிய அவமானத்தை சந்தித்தது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

எனவே அந்த சரித்திரத் தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டுள்ள அந்த அணி இந்த ஏலத்தில் தேவையான தரமான வீரர்களை வாங்குவதற்கு தயாராகியுள்ளது. குறிப்பாக 15 வீரர்களை தக்க வைத்த அந்த அணி 13 வீரர்களை விடுவித்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிசான், தேவால்ட் ப்ரேவிஸ் என தரமான வீரர்களுடன் ஓரளவு நல்ல வலுவாக காட்சியளிக்கிறது. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து கடந்த சீசனில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுழல் பந்துவீச்சுத் துறையிலும் ரித்திக் ஷாக்கின் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகிய இளம் வீரர்கள் தான் உள்ளனர்.

கும்ப்ளேவின் பரிந்துரை:
அதனால் நல்ல அனுபவம் மிக்க சுழல் பந்துவீச்சாளர் தேவைப்படும் அந்த அணி அடில் ரசித், தப்ரிஸ் சம்சி, ஆடம் ஜாம்பா போன்ற வெளிநாட்டு ஸ்பின்னர்கள் அல்லது அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா போன்ற அனுபவமிக்க இந்திய ஸ்பின்னர்களை வாங்க முயற்சிக்கும் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே கனித்துள்ளார். ஆனால் அவர்களை விட ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா தான் மும்பை அணிக்கு தகுதியான தேவையான சிறந்த வீரர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Sikandar Raza

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை அணியில் அனுபவம் மிக்க தரமான ஸ்பின்னர்கள் இல்லை. கடந்த வருடம் கார்த்திகேயா சிறப்பாக செயல்பட்டார். ஒருவேளை அவர்கள் அனுபவமிக்க இந்திய ஸ்பின்னரை தேர்ந்தெடுக்க விரும்பினால் அமித் மிஸ்ரா அல்லது பியூஸ் சாவ்லாவை வாங்கலாம். ஆனால் அவர்கள் காலம் கடந்தவர்கள் என்பதால் அது நடக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் வெளிநாட்டு ஸ்பின்னர்களை வாங்குவதற்கு மும்பை முயற்சிக்கலாம்”

- Advertisement -

“அது யாராக இருக்கும்? அந்த சூழ்நிலையில் அடில் ரசித், தப்ரிஸ் சம்சி, ஆடம் ஜாம்பா ஆகியோர் ஏலத்தில் உள்ளார்கள். ஆனால் நானாக இருந்தால் நிச்சயமாக சிக்கந்தர் ராசாவை வாங்க முயற்சிப்பேன். ஏனெனில் அவர் உங்களுக்கு அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார். அதே சமயம் அவருடைய சுழல் பந்துகளை எளிதாக அடிக்கவும் முடியாது. அதை விட சமீப காலங்களில் அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

Kumble

அவர் கூறுவது போல தற்சமயத்தில் ஜிம்பாப்வே அணியின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் சிக்கந்தர் ராசா சமீப காலங்களில் வங்கதேசத்தை சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: விராட் கோலி எப்பேர்ப்பட்ட கேப்டன். அவரைப் போய் இவருடன் ஒப்பிடுவதா? – பாக் கேப்டனை விமர்சித்த டேனிஷ் கனேரியா

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்க பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தற்சமயத்தில் உலக அளவில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். அதனால் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்படும் அவரை வாங்கினால் மும்பை அணியின் சுழல் பந்து வீச்சுத்துறை மிகவும் வலுவடையும் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

Advertisement