
கௌகாத்தியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 9/0 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இப்போட்டியில் கேப்டனாக செயல்படும் ரிஷப் பண்ட் எதிரணி விக்கெட் கொடுக்கும் வரை காத்திருந்ததாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார். அதற்கு பதில் பவுலர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருந்த பிட்ச்சில் அவர் ஃபீல்டர்களை சுற்றி நிற்க வைத்து அட்டாக் செய்திருந்தால் முன்னதாகவே விக்கெட் விழுந்திருக்கும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
அதை செய்யாததைப் பயன்படுத்திக்கொண்ட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானவர்கள் 30 – 40 ரன்களை அடித்ததாகவும் கும்ப்ளே கூறியுள்ளார். அதனாலேயே தென் ஆப்பிரிக்கா எளிதாக 489 ரன்கள் அடித்ததாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ரிஷப் பண்ட் வெளிப்படுத்திய தடுப்பாட்ட கேப்டன்ஷிப் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கும்ப்ளே கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய பவுலர்கள் மற்றும் அவர்களுடைய ஃபீல்ட் உத்திகள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் செட்டிலாக அனுமதித்தன. பிட்ச்சில் கொஞ்சம் உதவி இருக்கும் போது நீங்கள் விஷயங்களை நடக்க வைக்க வேண்டும். நீங்கள் எதிரணி பேட்ஸ்மேனை ஷாட்டுகளை அடிக்க தள்ள வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் வரும்”
“பவுமா, முல்தார், ஸ்டப்ஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே அட்டாக் செய்து விளையாடப் பார்த்ததை நீங்கள் பார்த்தீர்கள். நீங்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஷாட்டுகள் அடிப்பதையே விரும்புவீர்கள். அது நீங்கள் ஃபீல்டர்களை மேலே எடுத்தால் மட்டுமே நடக்கும். நீங்கள் லாங்க் ஃஆப், லாங்கா ஆன், டீப் கவர் ஆகிய பகுதிகளில் ஃபீல்டர்களை நிறுத்தினால் பேட்ஸ்மேன்கள் எளிதாக நேராக அடிப்பார்கள்”
இதையும் படிங்க: ஆஸியில் சாதிக்க சச்சினின் இந்த மாஸ்டர்க்ளாஸை ஃபாலோ பண்ணுங்க.. ஜோ ரூட்டுக்கு வாகன் அட்வைஸ்
“விக்கெட்டுகள் அடிக்கடி விழாத சூழ்நிலைகளுக்கு இந்திய அணி பழக்கம் இல்லாததாக இருக்கலாம். அவர்கள் இயல்பாகவே ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிட்ச்களில் பழகி விட்டார்கள். அது போன்ற ஸ்பின் பிட்ச்களில் நீங்கள் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுக்கும் வரை காத்திருக்கலாம். ஆனால் இது போன்ற பிட்ச்களில் நீங்கள் விக்கெட்டை எடுப்பதற்கு தேவையான அழுத்தத்தை உண்டாக்க வேண்டும்” என்று கூறினார்.