ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. பெர்த் மைதானத்தில் 2 நாட்களில் முடிந்த அப்போட்டியில் இங்கிலாந்தின் தோல்விக்கு சுமாரான பேட்டிங் முக்கிய காரணமானது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் மிட்சேல் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார்.
2வது இன்னிங்ஸில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை கவர் டிரைவாக அடிக்க முயற்சித்து இன்சைட் எட்ஜ் முறையில் போல்ட்டானார். இதையும் சேர்த்து 2013 முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 29வது இன்னிங்ஸில் அவர் சதமடிக்க முடியாமல் ஏமாற்றத்தைச் சந்தித்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் சதமடிக்காமலேயே அதிக இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற மோசமான உலக சாதனையையும் அவர் படைத்தார்.
சச்சினை ஃபாலோ பண்ணுங்க:
அதனால் 13500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருமுறை கூட சதமடித்ததில்லை என்பது பெரிய கறையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் 2002 சிட்னி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் அடிக்காமலேயே இரட்டை சதமடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவர் பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி மைக்கேல் வாகன் தெரிவித்தது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஜோ ரூட் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் ஒரு சேனலை தனதாக்க அதிகமாக முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய கண் பார்வைக்கு வெளியே செல்லும் பந்துகளை அப்படியே செல்ல விட வேண்டும். மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். சிறந்த வீரரான அவரை விட தற்சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே அதிக டெஸ்ட் ரன்கள் அடித்துள்ளார்”
வாகன் அட்வைஸ்:
“எனவே 2002 சிட்னி டெஸ்ட் போட்டியில் பந்தை டிரைவ் அடிக்காமலேயே 241* ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் புத்தகத்திலிருந்து ஒரு இலையை ஜோ ரூட் எடுப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக முற்றிலுமாக ஆட்சேபிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொறுமையுடன் காத்திருங்கள். நேரான அல்லது ஷார்ட் அல்லது புல் அடிக்கக்கூடிய பந்துகளுக்காக காத்திருங்கள்”
இதையும் படிங்க: முட்டாள் இல்லன்னு திட்டுனாரு.. 2019 ஐபிஎல் போட்டியில் தோனி சொன்னது பற்றி தீபக் சஹர்
“பவுலர்கள் உங்களை நோக்கி வர வையுங்கள். ஆஸ்திரேலியாவில் 30+ ரன்கள் எதற்கும் உதவாது. அங்கே அனைத்தும் சதங்களை பற்றியது” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி தடுமாறிய போதும் 2002 சச்சின் டெண்டுல்கரின் மாஸ்டர்கிளாஸை பின்பற்றுமாறு பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினார்கள். அதை விராட் கோலி கேட்காத நிலையில் ரூட் கேட்பாரா? என்பதைப் பார்ப்போம்.



