
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 3வது போட்டியில் ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 208/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 54, ஆண்ட்ரே ரசல் 64* ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 209 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32, ராகுல் திரிபாதி 20, ஐடன் மார்க்ரம் 18, அப்துல் சமத் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் மிடில் ஓவரில் நட்சத்திர வீரர் ஹென்றிச் கிளாசின் அதிரடியாக 63 (29) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது.
ரசல் சாதனைகள்:
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3, ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 64* ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரசல் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பேட்டிங்கில் 119/6 என தடுமாறிய போது களமிறங்கிய அவர் தமக்கே உரித்தான பாணியில் காட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்டு கொல்கத்தாவை காப்பாற்றினார்.
இந்த 7 சிக்சர்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை ரசல் 1322 பந்துகளில் 200 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் கிறிஸ் கெயில் 1811 பந்துகளில் 200 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஐபிஎல் தொடரில் 100 இன்னிங்ஸ்களுக்குள் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் ரசல் படைத்துள்ளார்.
இது வரை ரசல் 97 இன்னிங்சில் 200 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் இதற்கு முன் கிறிஸ் கெயில், தோனி, பொல்லார்ட், ஏபி டீ வில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர் 100 இன்னிங்ஸ்கள் கடந்த பின்பே 200 சிக்ஸர்கள் அடித்திருந்தனர். இது போக 64* ரன்கள் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 1+ விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 2 விதிமுறைகளை மீறி திமிராக நடந்து கொண்ட கொல்கத்தா வீரர்.. 2 தண்டனைகளை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்
இது வரை 113 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் அதிகபட்சமாக 9 முறை 50+ ரன்களும் 1+ விக்கெட்டும் எடுத்துள்ளார். இதற்கு முன் ஜேக் காலிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் அதிகபட்சமாக 8 போட்டிகளில் 50+ ரன்கள் 1+ விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் முதல் போட்டியிலேயே அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது கொல்கத்தா அணிக்கு பலமாக அமைந்துள்ளது.