
இந்திய அணியின் அனுபவ நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடியிருந்த அவர் 156 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் அமித் மிஸ்ராவால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவு சோபிக்க முடியாமல் போனது.
அது தவிர்த்து ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 162 போட்டியில் விளையாடியுள்ள அவர் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 42 வயதினை எட்டியுள்ள அவர் நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் அவர் இனியும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்காது என்பதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் :
கேப்டன்களுக்கு சாதகமான வீரர்களையே இந்திய அணியில் தேர்வு செய்வார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டினை முன் வைத்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் கிடைக்காத போது அதிருப்தியாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக அணியில் இடம் கிடைத்தும் பிளேயிங் லெவனில் விளையாட முடியாமல் போனால் அது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும்.
அதேபோன்று நான் முதன்மை அணியில் விளையாட முடியாமல் பலமுறை வேதனையை அனுபவித்துள்ளேன். இந்திய அணியை பொறுத்தவரை ஒரு சில வீரர்கள் கேப்டன்களுக்கு விருப்பமான வீரர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும் நபர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும். இப்படி ஒரு நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க : சவுரவ் கங்குலிக்கு பிறகு சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்கப்போகும் பி.சி.சி.ஐ-யின் உயர்பதவி – விவரம் இதோ
மற்றபடி நமக்கு வாய்ப்பு கிடைக்காத போது உடற்தகுதி, பேட்டிங், பவுலிங் என எந்த துறையில் முன்னேற்றம் தேவை என்று நினைத்து அதில் கடுமையாக உழைத்தால் கூட கேப்டன் ஃபேவரிட்டிசம் காரணமாக வாய்ப்பை இழக்கவும் நேரிடும் என்று அமித் மிஸ்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.