அவங்க சென்னை ரசிகர்களே கிடையாது.. சிஎஸ்கே ரசிகர்கள் என்னையும் ஜடேஜாவையும் கடுப்பாக்கிடாங்க.. ராயுடு அதிருப்தி

Ambati Rayudu 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இதுவரை விளையாட 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி 3வது இடத்தில் இருக்கிறது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் கடந்த வருடம் வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இந்திய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி செயல்பட்டு வந்தார். அவருடைய தலைமையில் 5 ஐபிஎல், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் சென்னை அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக தோனி திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கடுப்பான ராயுடு, ஜடேஜா:
அப்படி தங்களுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததால் அவரை சிஎஸ்கே ரசிகர்கள் தல என்று கொண்டாடி வருகின்றனர். அதே காரணத்தால் மற்ற வீரர்களை காட்டிலும் சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு எப்போதுமே அதிகமான ஆதரவை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கேமராவில் முகத்தை காட்டும் போதும் களத்திற்கு பேட்டிங் செய்ய வரும் போதும் அவரை சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமாக கூச்சலிட்டு வரவேற்பது வழக்கமாகும்.

அதன் உச்சமாக கடந்த வருடம் தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக அவருக்கு முன் களமிறங்கிய ஜடேஜா, ராயுடு போன்ற வீரர்கள் சீக்கிரம் அவுட்டாக வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களே விரும்பிய வினோத சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில் கடந்த வருடம் தாமும் ஜடேஜாவும் பவுண்டரி அடிக்கும் போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் அமைதியாக இருந்ததாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அது தங்களை கடுப்பேற்றியதாக தெரிவிக்கும் அவர் சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனி ரசிகர்கள் பின்பு தான் சென்னை ரசிகர்கள் என்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்தால் கூட ரசிகர்கள் அமைதியாக இருப்பார்கள். கடந்த சில வருடங்களாக நானும் ஜடேஜாவும் இதை உணர்ந்தோம்”

இதையும் படிங்க: அதை காமிச்சா உங்களுக்கு அசிங்கமா போய்டும் சார்.. நிதிஷ் ராணா பதிலால் ஹர்ஷாவுக்கு நேர்ந்த பரிதாபம்

“எனவே சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனியின் ரசிகர்கள் பின்பு தான் சென்னை ரசிகர்கள் என்று நான் சொல்வேன். அதற்காக ஜடேஜா மிகவும் கடுப்பானார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் சென்னை அணி தங்களுடைய கடைசி போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. அதில் வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் சென்னை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement