ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணி தங்களது முதல் போட்டியிலேயே ராஜஸ்தானை வெளுத்து வாங்கி 286 ரன்களை குவித்து அதிரடியாக வென்றது. அதனால் எதிரணிகளை மிரட்டும் என்று நம்பப்பட்ட அந்த அணி அடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்றது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 152/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 31 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய குஜராத் சுமாராக பவுலிங் செய்த ஹைதராபாத்தை எளிதாக எதிர்கொண்டு 16.4 ஓவரில் 153-5 ரன்களை எடுத்து தங்களது மூன்றாவது வெற்றியைப் பெற்றது.
சுமாரான பவுலிங்:
அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 49, கேப்டன் கில் 61*, ரூதர்போர்ட் 35* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தும் 4வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் கடைசி இடத்தை வலுவாகப் பிடித்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் பவுலர்கள் விக்கெட்டை எடுக்க பார்க்காமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அடிப்பதைத் தடுக்கப் பார்ப்பதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எனவே இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஹைதெராபாத் அணியின் பேட்டிங்கை விட அவர்களது பவுலிங் சுமார் என்று நினைக்கிறேன்”
ராயுடு விமர்சனம்:
“ஏனெனில் மிடில் ஓவர்களில் அவர்களில் யாருமே வந்து முக்கிய விக்கெட்டுகளை எடுக்கவில்லை அல்லது எதிரணியை அழுத்தத்திற்குள் தள்ளவில்லை. சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, ரசித் கான் ஆகிய குஜராத் பவுலர்கள் ஹைதராபாத்தை எப்படி அழுத்தத்தில் தள்ளினார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் மிகவும் நெருக்கமாக பௌலிங் செய்தனர். ஆனால் ஹைதராபாத் விக்கெட் எடுக்க பவுலிங் செய்வது போல் தெரியவில்லை”
இதையும் படிங்க: சிஎஸ்கேவை யூடியூபில் விமர்சித்த விவகாரம்.. ரசிகர்கள் விளாசலால்.. வீடியோவை திரும்ப பெற்ற அஸ்வின் விளக்கம்
“அவர்கள் கொஞ்சம் தடுப்பாட்டத்துடன் எதிரணி பேட்ஸ்மேன் பௌண்டரி அடிப்பதை நிறுத்தினால் போதும் என்ற வகையில் பௌலிங் செய்கின்றனர். இது போன்ற ஒரு சாதாரணமான மிடில் ஓவர் பவுலிங்கை வைத்துக்கொண்டு உங்களால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது. உங்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க நல்ல பவுலர்கள் தேவை” என்று விமர்சித்துள்ளார்.



