ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பத் தயாராகி வருகிறது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சென்னை இந்த வருடம் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 7 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது.
அதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 99% வாய்ப்பில்லை. வரலாற்றில் 18 ஐபிஎல் தொடர்களில் 16இல் விளையாடியுள்ள சென்னை 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த 11 வாய்ப்பில் 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை 5 கோப்பைகளை வென்ற வரலாற்றுப் பெருமையைக் கொண்டுள்ளது.
நல்ல பாடம்:
அப்படி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிப்பதற்கு பெயர் போன சிஎஸ்கே இந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கப் போராடுவது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் வருங்காலத்துக்கு திட்டமிடாமல் 5 கோப்பைகளை வென்ற பரிசில் ஓய்வெடுத்தால் இது தான் நடைபெறும் என்று சிஎஸ்கே அணியின் தோல்வி பற்றி அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். மேலும் 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு தக்க பாடத்தை எடுத்துள்ளதாகவும் ராயுடு கூறியுள்ளார்.
அந்தத் தோல்விப் பாடத்தால் தோனி அடுத்த வருடம் 6 – 7 வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் மொத்தமாக கழற்றி விட்டு புதிய இளம் அணியை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளதாக ராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ராயுடு பேசியது பின்வருமாறு. “இது சரிவிலும் மோசமான சரிவு என்பது எனக்குத் தெரியும். இது சிஎஸ்கே அணிக்கு சிறந்த பாடமாகும்”
ராயுடு கருத்து:
“நீங்கள் உங்களுடைய பரிசுகள் மீது ஓய்வு எடுத்து வருங்காலத்தில் கண்களை வைக்காமல் போனால் இது தான் நடக்கும். இங்கிருந்து சிஎஸ்கே அணி தங்களுடைய ஆட்டத்தை உருமாற்றுவதில் மிகமிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள். டி20 கிரிக்கெட் உருமாறி விட்டது என்பதை தோனியும் ஒப்புக்கொண்டார். அதனால் அடுத்த வருடத்திற்கான அணியைக் கட்டமைப்பது பற்றி தோனி சிந்திக்கத் துவங்கி விட்டார் என்று உறுதியாகச் சொல்வேன்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா பார்முக்கு வந்தா இதான் நடக்கும்.. மும்பை இந்தியன்ஸ் இஸ் பேக் – பொல்லாக் பேட்டி
“ஆயுஷ் மாத்ரே, ப்ரேவிஸ் ஆகியோர் நேர்மறையான அறிகுறிகள். சில நேரங்களில் இது போன்ற தோல்விகள் காற்றில் பறக்கும் ஒரு அணியை பூமிக்கு கொண்டு வந்து கிரிக்கெட்டை விட நீங்கள் பெரியவரில்லை என்பதை நினைவுப்படுத்தும். நீங்கள் அடிப்படைகளைப் பின்பற்றி பணிவுடன் இருக்க வேண்டும். சென்னை பேட்ஸ்மேன்களின் ஷாட் செலக்சனில் தவறில்லை. தேவைப்படுவதை விட அதிக நேரத்தை எடுத்துக் கொள்வது பிரச்சினையாகும். சிஎஸ்கே தற்போதைய அணியை எடுத்துச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. 6 – 7 சிறந்த வீரர்கள் மட்டும் தக்க வைக்கப்படுவார்கள்” என்று கூறினார்.



