ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் 14 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்ற ஹைதராபாத் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த வருடம் ஹைதராபாத் அணி மற்ற அணிகளை காட்டிலும் பேட்டிங்கில் அடித்து நொறுக்கி வருகிறது என்றே சொல்லலாம்.
அதற்கு துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். ஏனெனில் இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தால் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணி டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் குவித்தது. அத்துடன் இந்த ஜோடி லக்னோவுக்கு எதிராக 166 ரன்களை வெறும் 9.2 ஓவரில் சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது.
ராயுடு பாராட்டு:
இந்த ஜோடியில் இளம் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா இதுவரை 13 போட்டிகளில் 467 ரன்களை குவித்து எதிரணிகளை பந்தாடி வருகிறார். அத்துடன் 41 சிக்சர்கள் அடித்துள்ள அவர் நடப்பு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ளார். மேலும் ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் ஷர்மா சுயநலமின்றி விளையாடுவதாக முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கும் ராயுடு இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரிடம் நான் பேசினேன். அப்போது ஏன் நீங்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதைப் பற்றி நினைப்பதில்லை என்று கேட்டேன்”
“அதற்கு நான் நேர்மறையாக இருந்து ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்ஸராக அடிக்க முயற்சிப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் அவர் அணிக்காக மிகவும் சுயநலமின்றி விளையாடுவதாக நான் உணர்ந்தேன். பொதுவாக நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது இப்படி அடுத்தடுத்த பந்துகளை எளிதாக அடித்து 100 ரன்கள் அடிப்பதற்கான இன்னிங்ஸை கட்டமைக்க முடியும்”
இதையும் படிங்க: அடுத்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி விளையாடுவாரா? – நிர்வாகிகளிடம் தோனி சொன்னது என்ன?
“ஆனால் அதைச் செய்யாமல் அணிக்காக விளையாடும் அவரைப் போன்ற வீரரை நீங்கள் பாராட்ட வேண்டும். இப்படி சுயநலத்தைப் பற்றி சிந்திக்காத வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பது அரிதானதாகும். எனவே வருங்காலத்தில் உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியில் அவர் இல்லாமல் இருப்பதை நான் பார்க்கப் போவதில்லை. நீல ஜெர்ஸியை அணிந்த பின்பும் அவர் இந்தியாவுக்காக இதே மனநிலையுடன் விளையாடுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.