சொதப்பிய சென்னை! காயத்துடன் தனி சிங்கமாய் போராடிய முக்கிய வீரர் – குவியும் பாராட்டு

CSK vs PBKS
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 25-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 18 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற தொடக்கத்தை அளித்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ராஜபக்சாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார்.

7-வது ஓவரில் கைகோர்த்த இவர்கள் சென்னை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர்களின் பவுண்டரிகளையும் பறக்க விட்டனர். 18-வது ஓவர் வரை சென்னையை பந்தாடிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுவான நிலையை எட்ட செய்தபோது 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 (32) ரன்கள் எடுத்த ராஜபக்சா ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தனி ஒருவன் ராயுடு:
அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 19 ரன்கள் குவிக்க மறுபுறம் தொடர்ந்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ஷிகர் தவான் கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 88* (59) ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 187/4 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பிராவோ 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 188 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ராபின் உத்தப்பா 1 (7) மிச்சல் சாட்னர் 9 (15) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சிவம் துபே 8 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அதனால் 40/3 என ஆரம்பத்திலேயே சரிந்த சென்னையை மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 4 பவுண்டரி உட்பட 30 (27) ரன்கள் எடுத்து போராடினாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் 89/4 என தோல்வியின் பிடியில் சென்னை சிக்கிய போது களமிறங்கிய அனுபவ வீரர் அம்பாத்தி ராயுடு முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். விக்கெட் விழுந்ததையும் பொருட்படுத்தாமல் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட வெறும் 39 பந்துகளில் 78 ரன்களை தெறிக்கவிட்ட அவர் சென்னையின் வெற்றிக்கு தனி ஒருவனை போல போராடி 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சென்னை தோல்வி:
ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்து 21* (16) ரன்கள் எடுத்து பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் எம்எஸ் தோனியும் 12 (8) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 176/6 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை போராடி தோற்றது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ரிஷி தவான் தவான் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த தோல்வியால் 8 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த சென்னை தொடர்ந்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது.

இதன் காரணமாக நடப்பு சாம்பியனாக விளங்கும் சென்னை இந்த வருடம் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகிவிட்டது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் தேவையான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட பஞ்சாப் வெறும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.

- Advertisement -

காயம் பட்ட சிங்கமாய் ராயுடு:
முன்னதாக இப்போட்டியில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்த போது முதல் ஓவரிலேயே கேப்டன் மயங்க் அகர்வால் அடித்த ஒரு பந்து பவுண்டரி நோக்கி பறந்த நிலையில் அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த அம்பத்தி ராயுடு தடுக்க முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து அவரின் கையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியதால் வலியால் துடித்த அவர் உடனடியாக பெவிலியனுக்கு திரும்பியதுடன் எஞ்சிய 19 ஓவர்கள் பீல்டிங் செய்யவில்லை.

அதன்பின் காயத்திற்காக மருந்தையும் ஐஸ்பேக் வைத்துக் கொண்டிருந்த அவர் 89/4 என சென்னை தவித்தபோது வேறு வழியில்லை என்பதால் தைரியத்துடன் களமிறங்கி காயத்துடன் பேட்டிங் செய்தார். குறிப்பாக ருதுராஜ் உடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சென்னையை மீட்கப் போராடியபோது ருதுராஜ் அவுட்டாகி வெளியே சென்றார்.

- Advertisement -

அந்த நிலைமையில் இனிமேல் பொருத்தால் வேலையாவது என்று அதிரடியை தொடங்கிய அவர் சந்தீப் சர்மா வீசிய ஓவரில் 6, 6, 6, 4 என சரவெடியாக ரன்களைக் குவித்து போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். இருப்பினும் அவருக்கு இணையாக இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் கடைசி வரை சென்னை தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : ரெய்னாவின் அருமை இப்போ தெரியுமே! வெற்றியை கோட்டைவிட்ட சென்னையை விளாசும் முன்னாள் வீரர் – எதற்கு தெரியுமா?

ஆனால் காயம்பட்ட சிங்கம் கர்ஜிப்பது போல் நேற்றைய போட்டியில் அற்புதமாக விளையாடிய ராயுடுவுக்காகவாவது சென்னை வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement