கட்டுனா இப்படி ஒரு மனைவியை கட்டணும்! ஆஸ்திரேலியாவுக்கு வேற லெவல் பெருமை சேர்த்த ஸ்டார்க் மனைவி

- Advertisement -

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரில் இன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்த ஆஸ்திரேலியா கோப்பையை 7-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. முன்னதாக கடந்து மார்ச் 4-ஆம் தேதியன்று நியூசிலாந்தில் கோலாகலமாக துவங்கிய இந்த உலக கோப்பையில் முதலில் நடைபெற்ற லீக் சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதே உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்விகளை பதிவு செய்ததால் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசை 157 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

மிரட்டிய அலிசா ஹீலி:
அதை தொடர்ந்து நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்த மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் ஓவரில் இருந்தே இங்கிலாந்தை சரமாரியாக அடித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356/5 ரன்களை குவித்தது.

அந்த அணிக்கு தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி மற்றும் ரிச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலிசா ஹீலி – பெத் மூனி 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக விசுவரூபம் எடுத்து இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்த தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 170 ரன்கள் விளாசினார். அவருடன் ரிச்சல் ஹெய்ன்ஸ் 68 ரன்களும் பெத் மூனி 62 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த அணிக்கு கேப்டன் ஹீதர் நைட் போன்ற முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய வேளையில் நடு வரிசையில் தனி ஒருத்தியாக விளையாடிய நட்சத்திர வீராங்கனை நட் ஸ்கீவர் 121 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 148* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்தின் வெற்றிக்காக போராடினார்.

ஆனாலும் இதர வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் அதிரடியான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்ததால் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 285 ரன்களுக்கு சுருண்டது. இதன் வாயிலாக 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து 7-வது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணி என தன்னை மீண்டும் இந்த உலகிற்கு பிரகடனப்படுத்தியது.

- Advertisement -

சாம்பியன் அலிசா ஹீலி:
இந்த மாபெரும் வெற்றியில் 170 ரன்கள் விளாசி மிக முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலியாவை நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி ஆட்டநாயகி விருதை வென்றார். இவர் ஆஸ்திரேலிய ஆடவர் அணியில் தனது திறமையால் பல வெற்றிகளைத் தேடி கொடுத்து ரசிகர்களிடம் புகழ்பெற்ற அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனைவி ஆவார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு உடனடியாக ஆஸ்திரேலியா திரும்பிய மிட்செல் ஸ்டார்க் தனது மனைவி விளையாடும் இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக நியூசிலாந்து சென்றடைந்தார்.

அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் மைதானத்திற்கு நேரிடையாக சென்று தனது மனைவிக்கு கைதட்டி ஆதரவு கொடுத்த அவருக்கு அவரின் மனைவி மிகப்பெரிய பரிசளித்தார் என்றே கூறலாம். ஏனெனில் 170 ரன்கள் விளாசிய அவர் ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக இந்த போட்டியில் அலிசா ஹீலி சதம் அடித்தபோது அதை அவரின் கணவர் மிட்செல் ஸ்டார்க் எழுந்து நின்று கைதட்டி பாராட்டிய வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

கட்டுனா இப்படி மனைவி கட்டணும்:
இதை பார்த்த பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் கட்டினால் இப்படி ஒரு திறமையான மனைவியை கட்ட வேண்டும் என சமூக வலைதளங்களில் மனதார பாராட்டி வருகிறார்கள்.

1. ஏனெனில் இந்தப் போட்டியில் 170 ரன்கள் அடித்து அவர் ஒட்டுமொத்த உலக கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பேட்டர் என்ற ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய ஜாம்பவான்களின் உலக சாதனையை உடைத்து புதிய சரித்திர உலக சாதனை படைத்துள்ளார்.

2. அதேபோல் இந்த உலகக் கோப்பையில் பைனல் உட்பட மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 2 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 509 ரன்களை விளாசி ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக சாதனை படைத்து தொடர்நாயகி விருதையும் தட்டிச் சென்றார்.

3. இந்த உலக கோப்பையில் மொத்தம் 509 ரன்கள் குவித்த அவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

4. மறுபுறம் கடந்த 2015-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்த உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றிய மிட்செல் ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றது பல ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

5. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் மீண்டும் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் (26 விக்கெட்கள்) சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்ததையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

6. அதாவது ஆடவர் உலக கோப்பை வரலாற்றில் ஒரு உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக கணவன் மிட்சேல் ஸ்டார்க் உலக சாதனை படைத்திருக்க அவருக்கு நிகராக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்டராக மனைவி அலிசா ஹீலி உலக சாதனை படைத்துள்ளார். இந்த இருவருமே தங்களது நாட்டிற்காக 2015 மற்றும் 2022 ஆகிய உலக கோப்பைகளில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் – தொடர் நாயகி விருதை வென்றுள்ளார்கள்.

இதையும் படிங்க : மகளிர் உலககோப்பை 2022 : இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி சாம்பியன், எத்தனாவது கோப்பைனு தெரியுமா?

7. இப்போது சொல்லுங்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவர்கள் மிகச் சிறந்த காதல் ஜோடி கணவன் மனைவி தானே. குறிப்பாக தனது நாட்டுக்காக தம்மைப்போலவே சொல்லப்போனால் தன்னையும் மிஞ்சும் அளவுக்கு பெருமை சேர்த்துள்ள அலிசா ஹீலியை மனைவியாக பெற்றதற்கு மிட்செல் ஸ்டார்க் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றே கூறலாம்.

Advertisement