இந்த சேட்டைய நிறுத்திட்டு பேசாம ஒழுங்கா விளையாடுங்க – ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸி அணியை ஓப்பனாக திட்டிய ஆலன் பார்டர்

Steve Smith Allan Border
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட அந்த அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்துள்ளதாக ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் ஓரளவு தாக்குப்பிடித்து 49 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதே பிட்ச்சில் 400 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யாக்கியது.

- Advertisement -

விளாசிய பார்டர்:
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக டோட் முர்பி 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட படுமோசமாக பேட்டிங் செய்து வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்மித் 25* ரன்களும் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் உலகின் நம்பர் ஒன் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படாத ஆஸ்திரேலிய படுதோல்வியை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக அங்கே “என்ன நடக்கிறது” என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ஆலன் பார்டர் விமர்சித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்தை ஒழுங்காக பார்த்து ஆடாமல் தவற விட்டு விட்டு சிறப்பாக பந்து வீசினீர்கள் என்று கட்டை விரலை உயர்த்தி எதிரணியை பாராட்டுவதெல்லாம் தேவையா? என ஆஸ்திரேலிய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை கடுமையாக திட்டியுள்ள அவர் இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கடினமான எட்ஜ் பகுதியில் பின்பற்றி விளையாடுங்கள். அதாவது அவர்கள் நம்மை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தாக்கும் போது நாம் அதற்கு கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் கொடுக்கிறோம். இங்கே என்ன தான் நடக்கிறது? இது மிகவும் மோசமாக உள்ளது”

- Advertisement -

“தயவு செய்து முட்டாள் தனமாக விளையாடாதீர்கள். ஆனால் இப்போட்டியில் ஆஸ்திரேலியா மூக்கை உடைத்துக் கொள்ளும் கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. ஆனால் நாமோ தம்ஸ் அப் கொடுக்கிறோம். ப்ளடி ஹெல். தற்போது இந்த தொடரில் நிறைய பயம் ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. வெற்றியைப் பற்றி நீங்கள் நிறைய பேசலாம். ஆனால் அதை பெறுவதற்கு கையில் பேட்டையும் பந்தையும் வைத்திருக்கும் நமது வீரர்கள் தான் சிறப்பாக செயல்பட வேண்டும்”

“இதிலிருந்து இத்தொடரில் வெல்வதற்கான வழியை கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் அவர்கள் அதை செய்தாக வேண்டும். இன்றுடன் இந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு எதையாவது செய்யுங்கள். ஏனெனில் அந்தளவுக்கு நாம் மோசமாக விளையாடியுள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : இவ்வளவு சீக்கிரம் இப்படி நடக்கும்னு நான் நினைக்கல – தோல்விக்கு பிறகு பேட் கம்மின்ஸ் பேசியது என்ன?

பொதுவாகவே தோற்றாலும் அதில் போராடி தோற்கும் குணம் கொண்ட ஆஸ்திரேலியர்கள் இப்போட்டியில் 3வது நாள் உணவு இடைவெளியில் பேட்டிங்கை துவக்கி தேநீர் இடைவெளிக்கு முன் 91 ரன்களுக்கு சுருண்டு போராடாமல் தோற்றனர். அது தான் ஆலன் பார்டர் போன்ற முன்னாள் வீரர்களின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement