
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அந்த வெற்றிக்கு 22 வயதாகும் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றியதால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த 2 போட்டிகளில் சுமாராக விளையாடிய அவர் ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் கடந்த வருடம் அறிமுகமான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்தார். இந்த வருடம் 1600 ரன்கள் குவித்துள்ள அவர் அதற்குள் 2 இரட்டை சதங்கள் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.
அதே போல டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்திலிருந்து ஜெய்ஸ்வால் மிகவும் போராடி கிரிக்கெட்டுக்கு வந்துள்ளதை பார்ப்பது நம்ப முடியாததாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால் புதியவர் என்பதால் இதுவரை பெரும்பாலான எதிரணி பவுலர்கள் அவருக்கு எதிராக திட்டங்களை வகுக்கவில்லை என்று பார்டர் கூறியுள்ளார்.
அதனாலேயே இத்தொடரின் ஆரம்பத்திலேயே சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தியதாக அவர் கூறியுள்ளார். எனவே வருங்காலங்களில் எதிரணி பவுலர்கள் திட்டங்கள் வகுக்கும் போது தடுமாறக்கூடிய ஜெய்ஸ்வால் மீண்டும் போராடி கம்பேக் கொடுப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய பின்னணி கதையை நான் விரும்புகிறேன்”
“நாம் இங்கே கடினமான குழந்தையை பற்றி பேசுகிறோம். 1.2 பில்லியன் மக்கள் இருக்கும் நாட்டிலிருந்து அவர் போராட்டங்களை கடந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளது நம்ப முடியாதது. அவரிடம் நம்ப முடியாத திறமையும் இருக்கிறது. அவர் புதியவராக இருப்பதால் தற்போது தன்னுடைய தருணங்களை கொண்டிருப்பார். எதிரணியினர் அவரைப்பற்றி இன்னும் அதிகமாக பார்க்கவில்லை”
இதையும் படிங்க: பும்ரா அட்வைஸ் கொடுத்தாரு.. ஃபாலோ ஆனிலிருந்து இந்தியாவை காப்பாத்த நினைக்கல.. ஆகாஷ் பேட்டி
“அவருக்கு எதிராக எதிரணிகள் வேலை செய்யத் துவங்க காலங்கள் ஆகும். அதனால் கொஞ்சம் கடினமான காலத்திற்குள் சென்று அவர் மீண்டும் தமக்குத் தாமே உழைத்து இன்னும் சிறந்த வீரராக கம்பேக் கொடுப்பார். அது நல்லதாக இருக்கும்” என்று கூறினார். இந்த 1 – 1* (5) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்த தொடரில் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது.