டி20 உ.கோ அணியில் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுக்கும் ஸ்டார் வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

IND vs ENG Jos Buttler
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதற்காக தரமான வீரர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு வருடமாக பல்வேறு டி20 தொடர்களில் விளையாடிய முன்னணி அணிகள் உலகக் கோப்பையில் விளையாடும் தங்களது வீரர்களை கிட்டதட்ட உறுதி செய்துள்ளன. அதில் அனைத்து அணிகளுக்கும் முன்னோடியாக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா ஆரோன் பின்ச் தலைமையிலான அணியை முதல் ஆளாக அறிவித்துள்ளது. அப்படி பரம எதிரியான ஆஸ்திரேலியா முந்திக்கொண்டதால் மற்ற அணிகளுக்கு முன்பாக 2வது ஆளாக இங்கிலாந்து தங்களுடைய டி20 உலக கோப்பை அணியை அறிவித்தது.

2019 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இயன் மோர்கன் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜோஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சமீப காலங்களில் ரன்களை குவிக்க தடுமாறி மோசமான பார்மில் இருக்கும் நட்சத்திர வீரர் ஜேசன் ராய் அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்து இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. அதே போல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் இன்னும் குணமடையாததால் இந்த உலகக் கோப்பையைத் தவற விடுகிறார்.

- Advertisement -

பேர்ஸ்டோவுக்கு பதில்:
முன்னதாக இந்த உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருந்த 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ வழக்கம்போல இடம் பிடித்திருந்தார். ஆனால் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளன்று கோல்ப் விளையாட சென்ற அவர் துரதிஸ்டவசமாக தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார். அந்த காயம் பெரிய அளவில் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த உலக கோப்பையிலிருந்து அவர் விலகுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்தது.

இதனால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு நட்சத்திர வீரர் அலெஸ் ஹேல்ஸ் சேர்க்கப்படுவதாக இங்கிலாந்து வாரியம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப் படுத்தினார்.

- Advertisement -

3 வருடங்கள்:
இங்கிலாந்துக்காக 60 டி20 போட்டிகளில் 1644 ரன்களை 136.66 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவர் 7 அரை சதங்களையும் ஒரு சதமும் அடித்திருந்தார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 70 போட்டிகளில் 2419 ரன்களை 37.8 என்ற சராசரியில் எடுத்து வந்த இவர் 2017இல் சக வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து ஒரு கிளப்பில் தகராறு செய்ததால் தடை செய்யப்பட்டார். அதில் நடந்த விசாரணையில் இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டவே 2018இல் 12 மாதங்கள் தடையும் 27,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

அதனால் பெரிய பின்னடைவை சந்தித்து மீண்டு வந்த இவர் 2019 உலக கோப்பைக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலும் தோல்வியடைந்தார். அப்படி 2 வருடத்திற்குள் 2வது முறையாக மோசமான நன்னடத்தையை வெளிப்படுத்திய இவர் 2019 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்படியே நாட்கள் உருண்டோடிய நிலையில் தடை காலம் முடிந்ததும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட துவங்கி சிறப்பாக செயல்பட்ட இவரை இங்கிலாந்து ஒரு வருடமாகியும் கண்டு கொள்ளாமலேயே இருந்தது.

- Advertisement -

ஆனால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் தடை காலம் முடிந்து தங்களது நாட்டுக்காக விளையாடியதை சுட்டிக் காட்டிய முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இவரை மீண்டும் அணியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்த இவர் ஒரு வழியாக 3 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது அதுவும் உலகக்கோப்பை அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AFG : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

அதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் சமீபத்திய ஹண்ட்ரட் தொடரில் அதிரடியாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார். மொத்தத்தில் தரமான வீரரான இவர் தண்டனைகளை கடந்து மீண்டும் உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவிக்கிறார்கள்.

Advertisement