தெரியாம தப்பு நடந்துருச்சு மன்னிச்சுடுங்க, ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட அலெஸ்டர் குக் – காரணம் என்ன

Alastair Cook
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்கு உள்ளான இங்கிலாந்து ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்று வரும் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 118 (118) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 224 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் மற்றும் கிறிஸ் ஓக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 251 ரன்களை துரத்தி வரும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 27/0 என்ற ரன்களுடன் வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

- Advertisement -

குக் மன்னிப்பு:
முன்னதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக லீட்ஸ் நகரில் இருக்கும் ஒரு சலூன் கடையில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோருடன் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். ஆன்லைன் பரிவர்த்தனை இல்லாத அந்த கடை மூடும் சமயத்தில் சென்ற அவர் முடிவெட்டிய பின் கார்ட் வாயிலாக பணம் செலுத்த முடியாது என்பதால் பின்னர் வங்கியில் செலுத்துவதாக உரிமையாளரிடம் சொல்லி விட்டு சென்றதாக இங்கிலாந்தின் பிரபல சன் பத்திரிகையில் நேற்று செய்திகள் வெளியானது.

ஆனால் 2 நாட்களாகியும் பணம் வராததால் வரும் திங்கள்கிழமைக்குள் அதை செலுத்துமாறு அந்த சலூன் கடைக்காரர் ஆடம் முஹம்மத் கெடு விதித்துள்ளதாகவும் சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அதைப் படித்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பிரபல பிபிசி தொலைக்காட்சியில் அது பற்றி நேரலையில் கலாய்க்கும் வகையில் பேசினார். மேலும் இது உண்மையாகவே நடந்த கதை என்றும் தாம் வதந்தியாக எதுவும் பேசவில்லை என்றும் அவர் சொன்னது அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

அப்படி இங்கிலாந்து பத்திரிகையும் முன்னாள் கேப்டனும் குற்றம் சாட்டிய அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் த்ரட்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “2வது போட்டியை முடித்துக் கொண்டு லண்டனிலிருந்து திரும்பிய அலெக்ஸ் கேரி தங்களுடைய அணியில் தான் இருந்தார். முடி வெட்டுவதற்கு செல்லவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன்” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.

அத்துடன் செய்திகளை எழுதுவதற்கு முன்பாக அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பதிவிடுமாறு புகழ்பெற்ற சன் பத்திரிகையை அவர் நேரடியாக சாடினார். முன்னதாக இத்தொடரின் 2வது போட்டியில் ஜானி பேர்ஸ்டோவை சர்ச்சைக்குரிய முறையில் அலெக்ஸ் கேரி அவுட் செய்ததை மறக்க முடியாது. அது பற்றி விமர்சித்த பென் ஸ்டோக்ஸை வாயில் பால் டப்பா வைத்திருப்பது போல் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கிண்டலடித்தன. அந்த நிலையில் ஸ்டீல் ஸ்மித் அவ்வாறு தெரிவித்தது ஒருவேளை அலெக்ஸ் கேரி மற்றும் ஆஸ்திரேலியாவை பழி வாங்குவதற்காக இங்கிலாந்தின் பத்திரிக்கை அப்படி போலியான செய்தியை வெளியிட்டிருக்கலாம் என்று அனைவரும் சந்தேகிக்க தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:வருங்காலம் முக்கியமில்லையா – விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்களா? கங்குலி பதில் இதோ

இந்நிலையில் பத்திரிகையில் வந்ததை படித்து விட்டு உண்மைத்தன்மை தெரியாமல் பேசியது தவறு தான் என்று அலெக்ஸ் குக் ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றி பிபிசி தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மழை பெய்த அந்த நாளில் ஒரு சிறிய வம்பு ஏற்பட்டது. குறிப்பாக முடி வெட்டியதை பற்றிய செய்தியை அன்று நாம் வானொலியில் விவாதித்தோம். இருப்பினும் அது தவறான அடையாளத்தால் ஏற்பட்டது. எனவே அலெக்ஸ் கேரி பற்றி தவறான அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement