
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது கணுக்கால் பகுதியில் காயமடைந்தார். அதனை தொடர்ந்து இதுவரை இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் அவர் காயத்திற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு தற்போது மெல்ல மெல்ல பயிற்சியினை துவங்கியுள்ளார். மேலும் முழு உடற்தகுதி அடைந்த பின்னர் தான் இந்திய அணிக்கு திரும்புவேன் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக முகமது ஷமிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் விளையாடிய வங்கதேச அணியின் துவக்க வீரர்களை பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் பந்துவீசியே வீழ்த்த முடியவில்லை. முதல் எட்டு ஓவர்கள் கடந்த பின்னர் ஒன்பதாவது ஓவரை வீச வந்து ஆகாஷ் தீப் தான் வீசிய முதல் ஓவரிலேயே வங்கதேச அணியின் துவக்க வீரரை வீழ்த்தினார்.
அதன்பிறகு மற்றொரு துவக்க வீரரையும் வீழ்த்தி இருந்தார். போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழை காரணமாக 35 ஓவர்களிலேயே முடிக்கப்பட்ட வேளையில் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இதையும் படிங்க : 6, 0, 6, 6, 6, 4.. 180 ரன்ஸ்.. ஸ்டார்க்கை வெளுத்த லிவிங்ஸ்டான் மாஸ் சாதனை.. ஆஸியை விளாசிய இங்கிலாந்து வெற்றி
பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரே கான்பூர் மைதானத்தில் சற்று சவாலை சந்தித்த வேளையில் ஆகாஷ் தீப் அசத்தலான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி வங்கதேச அணியின் துவக்க வீரர்களை வீழ்த்தி அசத்தியதன் மூலம் முகமது ஷமிக்கு சரியான மாற்றுவீரர் ஆகாஷ் தீப் தான் என்றும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என்றும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.