
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் நிச்சயம் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கடைசி நாளில் அபாரமாக பவுலிங் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு வாஷிங்டன் சுந்தர் முதல் முகமது சிராஜ் வரை அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ஆகாஷ் தீப் பேட்டிங்கில் 66 ரன்கள் குவித்து வெற்றியில் எதிர்பாராத முக்கிய பங்காற்றினார். 3வது நாளின் மாலையில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அவர் 4வது நாளில் எளிதாக அவுட்டாகி செல்வார் என்று இங்கிலாந்து எதிர்பார்த்தது.
ஆனால் 4வது நாளில் நங்கூரமாக விளையாடிய அவர் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது முதல் அரை சதத்தை அடித்து 66 ரன்கள் குவித்து இங்கிலாந்தின் நம்பிக்கையை உடைத்தார். இந்நிலையில் அன்றைய நாளில் மோசமான ஷாட்டை அடித்து எளிதாக விக்கெட்டை விடக்கூடாது என்று நினைத்ததாக ஆகாஷ் கூறியுள்ளார். அதே சமயம் நல்ல பந்தில் அவுட்டானால் பரவாயில்லை என்ற திட்டத்துடன் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை நான் எப்போதும் நம்பிக்கையின் அடிப்படையில் விளையாடுவதில்லை. அன்றைய நாள் இரவு நாம் எளிதில் அவுட்டாகக் கூடாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். மேலும் மோசமான ஷாட்டை அடிக்கக்கூடாது என்று நான் முடிவெடுத்து கமிட் செய்து கொண்டேன்”
“ஒருவேளை நல்ல பந்து என்னை அவுட்டாக்கினால் பிரச்சனையில்லை. அது கிரிக்கெட்டில் நடைபெறக்கூடிய ஒன்றாகும். ஒருவேளை நான் ரன்கள் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நாம் களத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய இலக்காக இருந்தது. அந்த உத்வேகத்துடன் விளையாடிய எனக்கு பேட்டிங் எளிதாக மாறியது. அந்த முக்கியமான போட்டியில் நாங்கள் 2 – 1 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியிருந்தோம்”
இதையும் படிங்க: அஷ்வினை வெளியேற்றினாலும் அது சி.எஸ்.கே அணிக்கு நல்லது தான்.. காரணத்தை கூறிய – சீக்கா ஸ்ரீகாந்த்
“நாங்கள் தொடர் முழுவதும் நன்றாக விளையாடியும் பின்தங்கியிருந்தோம். ஓவல் பிட்ச் ஃபிளாட்டாக இருந்தாலும் கடைசிக்கட்ட நாட்களில் வித்தியாசமாக செயல்படத் துவங்கியது. அப்போது ரசிகர்கள் எங்களது பின்னே இருந்தார்கள். அது அப்போட்டியை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையை எங்களுக்குக் கொடுத்தது. இங்கிலாந்து குவியலாக விக்கெட்டை இழக்கும் என்று நாங்கள் பேசினோம். அதுவே கடைசி நாளில் நடந்தது” என்று கூறினார்.