
ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. ஜூலை 31ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்து 23 ரன்களை முன்னிலையாக பெற்றது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் 7, சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் நைட் வாட்ச்மேனாக ஜோடி சேர்ந்த ஆகாஷ் தீப் 3வது நாளில் அபாரமாக விளையாடினார். சுமாரான பந்துகளில் அதிரடியாக பவுண்டரிகளை அடித்த அவர் பேட்ஸ்மேனை போல் சிறப்பாக விளையாடினார். மறுபுறம் அவரை அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து அணியினர் மிகுந்த விரக்தியடைந்தனர்.
அதைப் பயன்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து அசத்தினார். அதைப் பார்த்த கௌதம் கம்பீர் அரிதாக புன்னகைத்தார். கேப்டன் சுப்மன் கில் வெளியே வந்து கைதட்டி பாராட்டினார்.
அத்துடன் “ஹெல்மெட்டை கழற்றி சதத்தை அடித்தது போல் கொண்டாடு, நீ அதற்கு தகுதியானவன்” என்றும் அவர் ஆகாஷ் தீப்பை சிரித்த முகத்துடன் பாராட்டினார். இருப்பினும் அடக்கமாகவே கொண்டாடிய ஆகாஷ் தீப் தொடர்ந்து அபாரமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருவழியாக 66 (94) ரன்களில் அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய நைட் வாட்ச்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 66 ரன்ஸ்.. இங்கிலாந்தை கடுப்பேற்றி கம்பீரையே சிரிக்க வைத்து மாஸ் காட்டிய ஆகாஷ்.. கும்ப்ளேவுக்கு பின் சாதனை
இதற்கு முன் 2011ஆம் ஆண்டு இதே இங்கிலாந்தில் 84 ரன்கள் அடித்த அமித் மிஸ்ரா முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குப்பின் இரண்டாவது இடத்தில் ஆகாஷ் தீப் உள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் மூன்றாவது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 189/3 ரன்கள் எடுத்து 166 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது.