- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவுக்கு பதிலாக வந்து.. இங்கிலாந்தில் பும்ராவே செய்யாத 39 வருட சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் பரிதாபமாக தோற்றது. ஆனால் 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. பர்மிங்கம் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 மற்றும் 426/6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்தது.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 47 ரன்களுக்கு சுருட்டி 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இறுதியில் 608 ரன்களை துரத்திய இங்கிலாந்தை 271 ரன்களுக்கு மடக்கிப் பிடித்த இந்தியா பர்மிங்கம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றது. அத்துடன் பர்மிங்கம் மைதானத்தில் முதல் முறையாக வென்ற ஆசிய அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

பும்ராவுக்கு பதிலாக வந்து:

அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்களை அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். பவுலிங் துறையில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது.

அந்த சூழ்நிலையில் 2வது போட்டியில் பும்ரா ஓய்வெடுத்ததால் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் எடுத்தார். குறிப்பாக ஜோ ரூட்டை அவர் கிளீன் போல்ட்டாக்கியது பலரையும் பாராட்ட வைத்தது.

- Advertisement -

வரலாற்று சாதனை:

அந்த வகையில் மொத்தமாக இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் 187 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்து வீச்சை (10/187) பதிவு செய்த இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே பர்மிங்காமில் 1986ஆம் ஆண்டு சேட்டன் சர்மா 188 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: என்னா அடி.. மனுஷன் விளையாடுவானா அங்க? இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் மீது கமின்ஸ் அதிருப்தி

அந்த சாதனையை 1 ரன்னில் உடைத்துள்ள ஆகாஷ் தீப் கடந்த 21 வருடங்களில் சேனா நாடுகளில் 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் பும்ரா கூட இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்ததில்லை. அந்த வகையில் முகமது ஷமி இடத்தை நிரப்பும் அளவுக்கு ஆகாஷ் தீப் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -