ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற 16வது போட்டியில் மும்பை அணியை லக்னோ 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் தங்களுடைய சொந்த ஊரில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரில் 203-8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 60, ஐடன் மார்க்ரம் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய மும்பைக்கு துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் 5, ரியான் ரிக்கல்டன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் – நமன் திர் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
பாண்டியா சொதப்பல்:
ஆனால் அப்போது நமன் திர் 46 (24) ரன்னில் அவுட்டானதை தொடர்ந்து திலக் வர்மா இம்பேக்ட் வீரராக களமிறங்கி தடுமாற்றமாக விளையாடினார். மறுபுறம் அரை சதத்தை அடித்த சூரியகுமார் யாதவ் முக்கிய நேரத்தில் 67 (43) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடத் துவங்கினார்.
மறுபுறம் தொடர்ந்து திலக் வர்மா 25 (23) ரன்னில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். அதனால் மும்பை அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் பாண்டியா ஆலோசனைப்படி 19வது ஓவரில் அவர் ரிட்டையர்டு அவுட்டாகி சென்றார். அடுத்ததாக மிட்சேல் சான்ட்னர் பேட்டிங் செய்ய வந்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் மும்பைக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
அம்பானி ஏமாற்றம்:
அப்போது முதல் பந்தில் பௌண்டரி அடித்த பாண்டியா இரண்டாவது பந்தில் டபுள் எடுத்தார். ஆனால் அதற்கடுத்த 2 பந்துகளை அடித்த பாண்டியா சிங்கிள், டபுள் எடுத்து மிட்சேல் சான்ட்னருக்கு ஸ்ட்ரக்கை கொடுக்கவில்லை. குறிப்பாக அவரால் ஃபினிஷிங் செய்ய முடியாது என்று கருதிய பாண்டியா “தோனி போல நாமே ஃபினிஷ் செய்யலாம்” என்று நினைத்து சான்ட்னருக்கு ஸ்ட்ரக் கொடுக்கவில்லை.
அதைப் பெவிலியனில் இருந்து பார்த்த மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி “என்ன இது” என்ற வகையில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அதே போல மற்ற ரசிகர்களும் “இதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே” என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் சான்ட்னரை விட திலக் வர்மா மிகச்சிறந்த முழு நேர பேட்ஸ்மேன்.
இதையும் படிங்க: சுனில் நரைனை பாத்து தான் இதை செய்றேன்.. அவர மாதிரி அட்டாக் செய்வேன்.. மும்பையை சாய்த்த திக்வேஷ் பேட்டி
அப்படிப்பட்ட அவரை ரிட்டையர்டு அவுட்டாகி வெளியே அனுப்பி வைத்து விட்டு சான்ட்னருக்கு ஸ்ட்ரக்கை கொடுக்காததில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும் சென்னை அணிக்காக சான்ட்னர் ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த திறமை கொண்டவர். அப்படிப்பட்ட அவரையும் நம்பாத பாண்டியா 5வது பந்தில் சிங்கிள் மட்டுமே எடுத்து ஃபினிஷிங் செய்ய தவறினார். அதனால் 20 ஓவரில் 191-5 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை 3வது தோல்வியை சந்தித்தது.



