
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பிறகு காயம் காரணமாக தொடர்ந்து பல்வேறு டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட வேளையில் முகமது ஷமிக்கு 18 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இடம் கிடைத்திருந்தது.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இப்படி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் போனது? பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி இருந்தது.
இந்நிலையில் முகமது ஷமி ஏன் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை? என்கிற தெளிவான விளக்கத்தை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அஜித் அகார்கர் கூறியதாவது : முகமது ஷமியின் பணிச்சுமை கவனிக்கப்பட வேண்டிய இடத்தில் இல்லை. அவரால் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று நினைத்தோம்.
ஆனால் எதிர்பாரா விதமாக அவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியை எட்டாததாலே அவரது உடற்தகுதியை கணக்கில் கொண்டே அவரை அணியிலிருந்து நீக்கியுள்ளோம் என அஜித் அகார்கர் அவர்கள் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித், கோலியும் இல்ல.. சர்பராஸ் கழற்றி விடப்பட்டு கருண் நாயரை சேர்க்க காரணம் என்ன? அகர்கர் பதில்
ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனாலும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத அவர் பழைய பந்துவீச்சு ரிதத்தை இன்னும் பிடிக்கவில்லை இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.