
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி கொல்கத்தாவின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது : உண்மையிலேயே இது ஒரு மிகச்சிறப்பான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் நாங்கள் மீண்டு வந்த விதம் அற்புதமாக இருந்தது. ஏனெனில் சன் ரைசர்ஸ் அணி ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடும்போது 190 முதல் 200 ரன்கள் வரை வரும் என்று எதிர்பார்த்தோம்.
இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் 190 முதல் 200 வரை ரன்கள் வரும் பட்சத்தில் இலக்கும் சவாலாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்கள் இணைந்து மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த போட்டியின் முமென்டம் அங்கு தான் மாறியது. இந்த போட்டியில் பந்துவீச்சு துறையில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களே வெற்றிக்கு காரணமாகவும் நான் பார்க்கிறேன்.
இதையும் படிங்க : 3 ஆவது பவுலராக ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய சுனில் நரேன் – விவரம் இதோ
கடந்த ஐந்து, ஆறு போட்டிகளாகவே எங்களது அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பயிற்சியின் போதும் சரி, போட்டிகளில் விளையாடும் போதும் சரி அவர்கள் காட்டுகின்ற உத்வேகம் எங்களை தற்போது வெற்றிப் பாதைக்கு திருப்பியுள்ளதாக கே.கே.ஆர் அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.