சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 110 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது.
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து : ரஹானே வருத்தம்
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி இம்முறை எட்டாவது இடத்தை பிடித்துள்ளது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 278 ரன்களை குவிக்கவே பின்னர் 279 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 168 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணியானது 110 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
பந்துவீச்சின் போது நாங்கள் தவறுகளை செய்ததால் அதனை பிடித்துக் கொண்ட சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அதிரடியாக ரன்குவித்து விட்டனர். அதிலும் குறிப்பாக மோசமான பந்துகளை தவறாமல் அடித்த சன்ரைசர்ஸ் வீரர்கள் நாங்கள் வீசிய நல்ல பந்துகளையும் அடித்து நொறுக்கினர். அதேவேளையில் இரண்டாம் பாதியில் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
அதனால் எங்களால் பெரிய அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதேபோன்று பந்துவீச்சின் போது நாங்கள் ஸ்லோவர் பந்து, யார்க்கர் பந்து, அகலப் பந்து என எந்த பந்து வீசினாலும் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர். அதனால் பந்துவீச்சில் எங்களால் சரியான திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க : நாங்க பைனலுக்கு வரவேண்டிய டீம்.. ஆனா இப்படி நடந்ததில் வருத்தம் தான் – பேட் கம்மின்ஸ் பேட்டி
இந்த தொடரில் இரண்டு மூன்று போட்டிகள் எங்களுக்கு நெருக்கமான போட்டிகளாக அமைந்தும் அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். டி20 கிரிக்கெட்டில் இது போன்ற தோல்விகள் நிகழக்கூடிய ஒன்றுதான். நிச்சயம் இந்த தொடரில் இருந்து கற்றுக் கொண்ட படங்களை வைத்து அடுத்த ஆண்டு வலுவாக திரும்புவோம் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.



