ஆஸ்திரேலியாவில் உயிரை கொடுத்து விளையாடுனது நானு. பேரு மட்டும் அவருக்கா? – இந்திய வீரர் ஆதங்கம்

IND
- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியா விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கேப்டனாக விராட் கோலி தலைமை தாங்கினார். பகல் – இரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 2வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து வரலாற்றிலேயே படு மோசமான தோல்வியை சந்தித்தது.

Rahane

- Advertisement -

கேப்டன் அஜிங்கிய ரகானே:

அப்போது ரிஷப் பண்ட், புஜாரா, விஹாரி, அஷ்வின் ஆகியோர் பேட்டிங்கில் தூண் போல நின்று போராடியதால் தோற்க இருந்த அந்தப் போட்டியை இந்தியா போராடி டிரா செய்தது. அதன்பின் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாதபோதும் இளம் வீரர்களை வைத்துக் கொண்டு அபார வெற்றி பெற்ற இந்தியா 32 ஆண்டுகளுக்கு பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ செய்து சரித்திர வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவில் சாதனை:
மொத்தத்தில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி இல்லாத நேரத்திலும் பும்ரா, ஷமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அஜிங்கிய ரஹானே 2 – 1 என்ற கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார் என்றே கூறலாம். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திர சாதனை படைத்தது.

Rahane-3

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது உழைப்பில் கிடைத்த புகழை வேறு ஒருவர் பெற்றுக்கொண்டதாக ரஹானே குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர் போரியா மஜும்தார் உடன் இன்று பங்கேற்ற உரையாடல் நிகழ்ச்சியில் அவர் கூறியது பின்வருமாறு. “எனது கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் கூறுவதை பார்த்து நான் சிறிய அளவில் சிரிப்பேன். மக்களுக்கு தெரிந்த விளையாட்டு எப்போதும் அவ்வாறு பேசாது – ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பும் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு பற்றி கிரிக்கெட்டை விரும்பியவர்கள் பாராட்டி பேசினார்கள்” என கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த டெஸ்ட் தொடரில் கடைசியாக ஒரு சதம் அடித்த அஜிங்க்ய ரஹானே இந்தியாவிற்கு பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் இருந்து வரும் அவருக்கு விரைவில் நடைபெற இருக்கும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என பேசப்பட்டு வருகிறது. அதைப்பற்றித்தான் அஜிங்கிய ரகானே தற்போது அவ்வாறு தெரிவித்துள்ளார்.

Ravi-shastri

புகழ் வேறு ஒருவருக்கா:
“ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த தொடரில் நான் எவ்வளவு பங்காற்றி உள்ளேன் என்பது பற்றி எனக்கு தெரியும் ஆனால் அதற்கான புகழைத் தேடி செல்வது என்னுடைய இயற்கையான பண்பு கிடையாது. அந்தத் தொடரில் ஒரு சில முக்கியமான முடிவுகளை நான் கேப்டனாக எடுத்தேன். ஆனால் அதற்கான பெயரை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டார்கள். இருப்பினும் அந்தத் தொடரை வென்றது தான் எனக்கு முக்கியமானதாகும்” என இது பற்றி அஜின்க்யா ரகானே மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வெற்றியாக கருதப்படும் அந்தத் தொடரில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாக ஒரு சில முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி இருந்தார். குறிப்பாக காபாவில் நடந்த கடைசி போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்கள். அவர்களை அவ்வாறு விளையாடச் சொல்லி நான்தான் முடிவு எடுத்தேன் என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மையில் அந்த முடிவை கேப்டனாக தாம் தான் எடுத்ததாக கூறியுள்ள அஜிங்க்ய ரஹானே அந்தப் புகழை வேறு ஒருவர் பெற்றுக் கொண்டதாக ரவி சாஸ்திரியின் பெயரை குறிப்பிடாமல் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். சமீபத்திய தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய அஜிங்க்ய ரஹானேவுக்கு விரைவில் துவங்க இருக்கும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement