
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கிய நடைபெற்று வருகிறது. அத்தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குறிப்பாக அமீரகத்தை 57 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 4.3 ஓவரில் இலக்கைத் தொட்டு மிரட்டலான வெற்றியைப் பெற்றது.
அதனால் தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்த இந்தியா குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. முன்னதாக அப்போட்டியில் அமிரக வீரருக்கு எதிராக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை திருப்பப் பெற்றது சலசலப்பை உண்டாக்கியது. அதாவது சிவம் துபே வீசிய 12வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட அமீரக பேட்ஸ்மேன் ஜுனைட் சித்திக் அடிக்காமல் தவற விட்டார்.
அதைக் கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப் மேலே பந்தை ஏறிந்து அவுட் கேட்டார். அதை சோதித்த போது சித்திக் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே நின்றது தெளிவாகத் தெரிந்ததால் 3வது நடுவர் அவுட் வழங்கினார். இருப்பினும் பந்தை எதிர்கொண்ட வேகத்தில் எங்கே நிற்கிறோம் என்று தெரியாமல் அவர் சில வினாடிகள் தடுமாற்றமாக நின்றார்.
அந்த இடைவெளிக்குள் சாம்சன் சரியாக பந்தை அடித்தார். அந்த வகையில் சித்திக் வேண்டுமென்று வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறவில்லை என்ற கருதிய சூரியகுமார் தங்களது முடிவை திரும்பப் பெற்று அவரை தொடர்ந்து விளையாட அனுமதித்தார். அதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாராட்டிய போதிலும் இதையே பாகிஸ்தானுக்கு எதிராக செய்திருப்பீர்களா? என்று சூரியகுமாரை ஒரு தரப்பினர் விமர்சித்தனர்.
இந்நிலையில் சூரியகுமார் செய்தது மிகவும் சரியானது என்று முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரகானே பாராட்டியுள்ளார். வெற்றிக்காக கடினமாக விளையாடக்கூடிய இந்தியா கிரிக்கெட்டை எப்போதும் நியாயமாகவும் நேர்மையாகவும் விளையாடும் என்று ரஹானே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது இந்திய அணி மற்றும் கேப்டன் சூரியாவிடமிருந்து சிறந்த முடிவு”
இதையும் படிங்க: இந்தியன்னு நிரூபிக்க முயற்சிக்கும் கெட்டுப்போன முட்டை.. தவான், யுவியை மறைமுகமாக விமர்சித்த அப்ரிடி
“ஏனெனில் அந்த தருணத்தில் சித்திக் ரன் எடுக்க முயற்சிக்கவில்லை. அவர் வெள்ளைக்கோடு எங்கே இருக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல் நின்றார் என்று யூகிக்கிறேன். மறுபுறம் ஒரு விக்கெட் கீப்பர் அல்லது ஃபீல்டராக பந்தை கையில் எடுத்ததும் உங்களுடைய உள்ளுணர்வு ஸ்டம்ப் மேலே குறியை வைக்கும். இறுதியில் சரியான முடிவை எடுத்த இந்திய அணி சிறந்த குணம் மற்றும் விளையாட்டின் நல்ல நேர்மைத்தன்மையை காண்பித்தது. நீங்கள் கிரிக்கெட்டை கடினமாக நியாயத்துடன் விளையாடுவதையே பார்க்க விரும்புவீர்கள்” என்று கூறினார்.