
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. நேற்று வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியா 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து 2026 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியது.
அந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்த ஹர்ஷித் ராணா பேட்டிங்கில் 29 (23) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது களமிறங்கிய ராணா அதிரடியான சிக்ஸர் பறக்க விட்டு 29 ரன்கள் குவித்தது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.
2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு ராணா முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கௌதம் கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய ராணாவை ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து கிண்டலடித்தார்கள்.
இருப்பினும் அதை காதில் வாங்கிக்கொள்ளதாக அவர் கம்பீரின் ஆதரவுடன் சிறப்பாக விளையாடத் துவங்கியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் தம்மை கிண்டலடித்ததற்காக 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது ராணா மிகவும் வேதனைப்பட்டதாக கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இருப்பினும் அதைத் தவிர்ப்பதற்காக ராணா தனது காதுகளில் ஒலிக்கருவியை (ஏர்ஃபாட்) அணிந்து கொண்டு பயிற்சி எடுத்ததாக ரஹானே கூறியுள்ளார்.
அந்த வகையில் விமர்சனங்களைக் காதில் வாங்காமல் பயிற்சிகளை எடுத்த ராணா தற்போது கம்பேக் கொடுக்கத் துவங்கியுள்ளதாக ரஹானே பாராட்டியுள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த ஐபிஎல் தொடரில் ராணா விளையாடிய போது நாங்கள் சமூக வலைதளங்களைப் பற்றி பேசினோம். சில போட்டிகளில் அவர் நன்றாக விளையாடவில்லை. அதனால் அடிப்படையில் அவரிடம் கொஞ்சம் பதற்றம், சோகம் ஆகியவற்றைப் பார்த்தேன்”
இதையும் படிங்க: நீங்க அடிச்சது போதும் வெளியே வாங்க.. ஆஸியில் அவமான வரலாற்று சாதனை படைத்த பாக் வீரர் ரிஸ்வான்
“அது அவருக்கு தொந்தரவைக் கொடுத்தது. மக்கள் என்னுடைய கடினமான உழைப்பை பற்றி தெரியாமலேயே பேசுகிறார்கள் என்று அவர் கவலையுடன் தெரிவித்தார். அதே சமயம் விமர்சனங்கள் தமக்கு உத்வேகத்தைக் கொடுப்பதாகவும் ராணா கூறினார். அந்த சத்தங்களை தடுப்பதற்காக அவர் காதுகளில் ஒலிக்கருவியை போட்டுக்கொண்டு வலைப்பயிற்சியில் பந்து வீசியதை பார்த்தேன். பந்து வீசும் போது அவர் தன்னுடைய நிலையில் இருந்து ஒரே மாதிரியான தீவிரத்தன்மை மற்றும் மனநிலையைக் கடைபிடிக்க விரும்புகிறார்” என்று கூறினார்.