இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 18-ஆவது சீசனாக நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
அஜின்க்யா ரஹானே நிகழ்த்தியுள்ள அரிதான சம்பவம் :
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். இதன் காரணமாக தற்போது கொல்கத்தா அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஏற்கனவே கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி வெளியேற்றியதால் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக அந்த அணியால் அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாரும் எதிர்பாரா வகையில் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானேவை அந்த அணி கேப்டனாக நியமித்து அதிரடி காட்டியிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரஹானே ஒரு வித்தியாசமான நிகழ்வையும் ஐபிஎல் தொடரில் ஏற்படுத்த காத்திருக்கிறார். அதாவது ஐபிஎல் தொடரை பொருத்தவரை பெரிய தொகைக்கு வாங்கப்படும் வீரர்களே கேப்டனாக நியமிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளில் 9 அணிகளை சேர்ந்த கேப்டன்கள் கிட்டத்தட்ட 15 கோடிக்கு மேல் வாங்கக்கூடிய வீரர்களாக உள்ளனர். ஆனால் கொல்கத்தா அணியில் மட்டும் அடிப்படை விலையான ஒன்றரை கோடிக்கு வாங்கப்பட்ட ஒரு வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிகழ்வு ஐ.பி.எல் தொடரில் நடைபெறுவது உண்மையிலேயே அரிதான விடயம் தான்.
இதையும் படிங்க : எந்தவொரு கோச்சும் செய்யாத காரியத்தை செய்ய முன்வந்த கவுதம் கம்பீர்.. அதிரடியான முடிவால் – வியந்து போன பி.சி.சி.ஐ
இருந்தாலும் என்னதான் ஒன்றரை கோடிக்கு வாங்கப்பட்ட வீரராக ரஹானே இருந்தாலும் ஏற்கனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை வழி நடத்தியுள்ள அனுபவமுடையவர். அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இருந்து வருபவர் என்பதனாலும் அவரை நம்பி கொல்கத்தா அணி கேப்டன் பதவியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



