
இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் 2ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் வந்த விராட் கோலி, கே.எல் ராகுல் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். இறுதியில் இந்தியாவை 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்த தோல்விக்கு கடைசி விக்கெட்டுக்கு 1 ரன் தேவைப்பட்ட போது அர்ஷ்தீப் சிங் சிங்கிள் எடுக்காமல் அதிரடியாக விளையாடி அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.
ஒரு சுமாரான ஓவர்:
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் சூரியகுமார், ரிங்கு சிங் போன்ற பகுதி நேர பவுலர்கள் டி20 தொடரில் வெற்றியில் பங்காற்றினர். ஆனால் அதே போல இப்போட்டியில் சுப்மன் கில்லை பயன்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக முன்னாள் முன்னாள் வீரர் சபா கரீம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஒரு ஓவரில் 14 ரன்களை வழங்கிய கில்லுக்கு பதிலாக 4 ஓவரில் 19 ரன்களை கொடுத்த சிவம் துபேவுக்கு இன்னும் சில ஓவர்கள் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 தொடரில் ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோரிடம் பந்து வீசும் வாய்ப்பை வழங்கிய சூரியகுமார் தாமே பொறுப்புடன் பந்து வீசினார். ஆனால் இப்போட்டியில் சுப்மன் கில் தனது கேரியரிலேயே முதல் முறையாக பந்து வீசினார்”
“ஆனால் அந்த ஓவர் மோசமானதாக அமைந்தது. இலங்கை அதை பயன்படுத்திக் கொண்டது. அது போன்ற சூழ்நிலையில் இந்தியா சிவம் துபேவை முயற்சித்திருக்கலாம்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய அஜய் ஜடேஜா வெற்றி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத வரை பகுதி நேர பவுலர்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள் என்று ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கம்பீரை இம்ப்ரெஸ் பண்ணல.. அர்ஷ்தீப் சிங் திட்டு வாங்கப் போறாரு.. முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த போது ரிங்கு பந்து வீசியதை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இன்று போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வெற்றியை விட்டிருக்கக் கூடாது. நீங்கள் எப்போதும் புதிய தேர்வுகளை முயற்சிக்கலாம். ஆனால் அது வெற்றி முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் போது அல்லது தோல்வி உறுதியானது போது மட்டுமே முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.