
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதி நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த பரபரப்பான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்ற லக்னோ தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பெற்றது. முன்னதாக அப்போடியில் முதலில் களமிறங்கிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/7 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். அதை தொடர்ந்து 211 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் இணைந்து 99 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். இதில் கேப்டன் கேஎல் ராகுல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க அவருடன் பட்டையை கிளப்பிய குயின்டன் டி காக் 45 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி அவுட்டானர்.
கடைசி நேரத்தில் சரவெடியாக வெடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் வெறும் 23 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 55* ரன்களும் இளம் வீரர் ஆயுஷ் படோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 19* ரன்கள் விளாசி மிரட்டலான பினிஷிங் கொடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்ற லக்னோ இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. மறுபுறம் 210 ரன்கள் குவித்த போதிலும் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்ட சென்னை இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக பரிதாப தோல்வி அடைந்தது.
தோனி மீது குற்றசாட்டு:
முன்னதாக இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி அந்த பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். கடந்த 2008 முதல் தொடர்ந்து சென்னை அணிக்கு கேப்டனாக இருந்த அவர் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றில் 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சென்னையை முன்னேறினார். இருப்பினும் தற்போது 40 வயதை கடந்துள்ள அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் முதல்முறையாக சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
அப்படிப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜாவை சுதந்திரமாக கேப்டன்ஷிப் செய்ய விடாமல் எம்எஸ் தோனி குறுக்கிடுகிறார் என புதிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது. குறிப்பாக நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசிநேர பரபரப்பான தருணங்களில் சென்னை அணியை எம்எஸ் தோனி வழிநடத்த புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு சிறந்த பீல்டர் என்பதால் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்ய சென்றுவிட்டார்.
அதிலும் 19-வது ஓவரை இளம் வீரர் சிவம் துபேவுக்கு வழங்கும் முடிவை எம்எஸ் தோனி எடுக்க அந்த ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கிய சிவம் துபே சென்னை அணியின் வெற்றியை தாரை வார்த்தார். இப்படி முக்கியமான நேரத்தில் ஜடேஜாவுக்கு பதில் சென்னையை வழிநடத்தும் எம்எஸ் தோனி பற்றி முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா விமர்சனம் செய்துள்ளார்.
நீங்களே கேப்டனாக இருக்கலாம்:
இது பற்றி நேற்றைய போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இது ஒரு தவறான செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எம்எல் தோனியின் ஒரு தீவிர ரசிகன் என்றாலும் இந்த போட்டி லீக் சுற்றின் கடைசி போட்டியாகவோ அல்லது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா போட்டியாக இருந்தால் அவர் அப்படி வழி நடத்தியதை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் இது இந்த வருடத்தின் வெறும் 2-வது போட்டியாகும். ஒரு கிரிக்கெட் ரசிகனாக அல்லது வல்லுனராக அவர் செய்ததை நான் விரும்பவில்லை” என கூறினார்.
இதே விஷயத்தைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியது பின்வருமாறு. “நீங்கள் ஒருவரை கேப்டனாக வளர்க்க விரும்பினால் அவரை தனியாக விடவேண்டும். அதே சமயம் அவர் தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு தனியாக வழி நடத்தினால் தான் கேப்டன்” என கூறினார்.
அதாவது சென்னையின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை வளர்க்க நினைத்த எம்எஸ் தோனி அதற்காகத்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகி அவர் தலைமையில் விளையாடுகிறார். அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற வாழ்வா சாவா என்ற நிலைமை இல்லாத தருணத்தில் இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜாவை தனித்து செயல்பட விட வேண்டும் என தோனிக்கு முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஒருவேளை அதில் தோல்வி கிடைத்தாலும் அதில் கிடைக்கும் பாடங்களைக் கற்றுக்கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட முடியும் என பார்திவ் படேல் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஒரே ஓவரில் மேட்ச் க்ளோஸ்! இப்படி ஒரு மோசமான பவுலரை பார்த்ததே இல்லை – கொட்டு வாங்கும் இளம் வீரர்
இருப்பினும் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடிய போது இதே போல் பல முறை கடைசி நேரங்களில் இந்திய அணியை வழி நடத்தி வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.