
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 59 ரன்களையும், திலக் வர்மா 26 ரன்களையும் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளையும், சிபாம்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் :
12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 74 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறோம்.
இந்த போட்டியை நாங்கள் அற்புதமாக ஆரம்பித்திருந்தாலும் பேட்டிங்கை பொறுத்த வரை எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டோம் என்று நினைக்கிறேன். டி20 போட்டிகளில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் இந்த மைதானத்தில் கொஞ்சம் டென்னிஸ் பால் பவுன்ஸ் இருந்ததால் எங்களால் சரியான துவக்கத்தை பெற முடியவில்லை. 175 ரன்கள் என்பது வெற்றி பெறக்கூடிய இலக்கு தான் என்றாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே போட்டி எங்களிடம் இருந்து சென்றது.
இதையும் படிங்க : என்னை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம்.. கம்பேக்கில் ஆட்டநாயகன் விருது வெல்ல இதான் காரணம்.. பாண்டியா
முற்றிலுமாக பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாகவே இந்த தோல்வியை சந்தித்துள்ளோம். அதேபோன்று பந்துவீச்சிலும் இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைத்து இருக்கலாம். எது எப்படி இருப்பினும் இந்த முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு இரண்டாவது போட்டியின் போது மிகச் சிறப்பாக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என எய்டன் மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.