அவர் தெ.ஆ டி20 தொடரில் விளையாடினால் நிறைய கத்துக்குவேன் – முன்னாள் இந்திய கேப்டனை பாராட்டும் ஐடன் மார்க்ரம்

Aiden Markram
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 2016க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. தோற்றுவிக்கப்பட்ட 2015 காலகட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையில் அற்புதமாக செயல்பட்டு கோப்பையை வென்ற அந்த அணி நிர்வாகம் கடந்த 2021ஆம் ஆண்டு சுமாராக செயல்பட்டார் என்பதற்காக அவரை கழற்றி விட்டு கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்தது. அதற்கு அவரே பரவாயில்லை என்பது போல் சமீப காலங்களில் சந்தித்த எல்போ காயத்தால் தடுமாறிய வில்லியம்சன் கடந்த சீசனில் மோசமாக செயல்பட்டு ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அதனால் தற்போது அவரையும் கழற்றி விட்டுள்ள ஹைதராபாத் நிர்வாகம் தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர் ஐடன் மார்க்ரமை தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. கடந்த 2014 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக தென் ஆப்பிரிக்காவுக்கு வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 3 வகையான அணியிலும் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 27 இன்னிங்ஸ்சில் 879 ரன்களை 147.73 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் 2021 முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

தோனியை விரும்பும் மார்க்ரம்:
அதில் இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் 527 ரன்களை 40.54 என்ற நல்ல சராசரியில் 134.10 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முடிந்த சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் தொடரில் சன் ரைசர்ஸ் ஈஷ்ட்ர்ன் கேப் அணிக்கு கேப்டனாக முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்துள்ளார். அதனாலேயே ஐபிஎல் தொடரிலும் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 தொடரில் இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனி விளையாடினால் நிறைய கற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

தோனி போன்ற மகத்தான கேப்டனிடம் நிறைய கேப்டன்ஷிப் யுக்திகளை கற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயங் அகர்வால் தலைமையில் நான் விளையாடியுள்ளேன். அதே போல் புவனேஸ்வர் குமாருடைய அனுபவதுக்கு மாற்று கிடையாது. எனவே அந்த இருவரும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட சரிசமமான தகுதியுடையவர்கள். மேலும் தென்னாபிரிக்க டி20 தொடரில் எம்எஸ் தோனி போன்ற ஒருவர் எங்களுடைய அணியில் விளையாடுவதை நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“இந்த விளையாட்டு பற்றி அனைத்து விதமான அறிவுகளையும் அனைத்து விதமான அனுபவத்தையும் பெற்றுள்ள அவரிடம் நான் உட்பட எங்களது அணியில் இருக்கும் அனைவரும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் இருக்கும் உள்ளூர் வீரர்கள் அவரைப் போன்ற மகத்தான ஒருவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எனவே நீங்கள் கற்றுக் கொள்வது என்று கேட்டால் முதலில் தோனியின் பெயர் தான் எனக்கு நினைவுக்கு வரும். அவரைப் போல மேலும் சிலர் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் எப்போதுமே அனைத்து வீரர்களும் ஆவலுடன் கிரிக்கெட் பற்றிய யுக்திகளை கற்றுக் கொள்ள விரும்புவது போல் தாமும் விரும்புவதாக ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சி.எஸ்.கே பைனலுக்கே போனாலும் சரி. நான் ஒன்னும் பண்ண முடியாது – இப்போவே கண்டிஷன் போட்ட ஸ்டோக்ஸ்

இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் இந்த வருட ஐபிஎல் சீசனில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுடைய முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement