
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து அவ்விரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் தொடர் டிசம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது.
அத்தொடரிலும் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து வெற்றி பெற தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது. முன்னதாக டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இந்தியா ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினர். அந்தளவுக்கு அனுபவமும் தரமும் நிறைந்த அவர்கள் டி20 தொடரில் விளையாடாதது தங்களுக்கு சாதகம் என்று தென்னாப்பிரிக்கா ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
எனவே சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெறுவதற்கான தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மார்க்ரம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் டி20 அணியில் அங்கமாக இருக்க மாட்டார்கள் என்பது சிறந்தது. அவர்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறப்பாகவே இருக்கிறது”
“எங்களிடம் கூடுதலான திட்டங்கள் இல்லை. ஏனெனில் டி20 என்பது பொழுதுபோக்கிற்கான ஃபார்மட்டாகும். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட கிரிக்கெட்டின் பிராண்டை விளையாட விரும்புகிறோம். நாங்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறோம். எதிரணியின் சிறந்த திறனை காண்பிக்க விரும்புகிறோம். டி20 தொடர் புதிதாக துவங்குகிறது”
“அதற்கான பிளேயிங் லெவனை இன்னும் நாங்கள் இறுதி செய்யவில்லை. இன்னும் சில விவாதங்களை செய்து விட்டு அதை நாங்கள் முடிவெடுப்போம். முதல் போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தில் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. அப்போது விளையாடிய எங்கள் வீரர்கள் அந்த வெற்றிகளில் இருந்து தன்னம்பிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா மாதிரி வருண் சக்கரவர்த்தியும் இந்த விடயத்தில் அசத்துறாரு – ஸ்ரீதரன் ஸ்ரீராம் பாராட்டு
“டி20 தொடரில் பிட்ச்கள் மிகவும் நன்றாக அதிக ரன்கள் அடிப்பதற்கு சாதகமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இல்லையென்றாலும் நாங்கள் களத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாற்றிக் கொள்வோம். எனவே இத்தொடரின் முதல் போட்டியில் வென்று நாங்கள் நன்றாக துவங்குவது முக்கியம். நாங்கள் வெற்றிகரமாக தொடரை துவங்குவோம் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.